பூண்டி நீர்த்தேக்க பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிக்கு பூமி பூஜை: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்க பகுதியான சதுரங்கப்பேட்டை – மோவூர் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி செயற்பொறியாளர் ரமேஷ், பூண்டி நீர்த்தேக்க உதவி பொறியாளர் அகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு திட்ட பணிகளை துவக்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசியதாவது: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுக்கள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

பூண்டி அணைக்கட்டுப் பகுதியில் சதுரங்கப்பேட்டை, மோவூர் கிராம பகுதியில் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உணவகம் ஒன்று, சமையல் அறை, வரவேற்பு மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய புதிய நிர்வாக கட்டடம், அணுகுசாலை, உட்புற சாலை உள்பட வாகனங்கள் நிறுத்துமிடம், மின்னாக்கி வசதிகளுடன் கூடிய மின்பணிகள் போன்ற பணிகளை மொத்த திட்டப்பரப்பான 3.33 ஏக்கர் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளது என்றார்.

The post பூண்டி நீர்த்தேக்க பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிக்கு பூமி பூஜை: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: