பஞ்சாப்-அரியானா எல்லைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி: டெல்லி சலோ போராட்டம் 29ம் தேதி வரை நிறுத்தம்

 

சண்டிகர்: போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லியில் முற்றுகையிடும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் கடந்த 13ம் தேதி தொடங்கினர். பஞ்சாப், அரியானா மாநில எல்லைகளான ஷம்பு, கானவுரியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அவர்கள் அங்கேயே பல ஆயிரக்கணக்கான டிராக்டர், டிராலி, வேன்களுடன் முகாமிட்டுள்ளனர். கானவுரி எல்லையில் கடந்த 21ம் தேதி அரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, ரப்பர் குண்டுகளால் நடத்திய துப்பாக்கி சூட்டில் பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஷம்பு, கானவுரி எல்லையில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி சலோ போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்போராட்டம் வரும் 29ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்த விவசாயிகள் தற்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கருப்பு தினமாக அனுசரித்து, பிரதமர் மோடி, அமித்ஷாவின் உருவபொம்மை எரித்த விவசாயிகள், ஷம்பு, கானவுரி எல்லையில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். இதுவரை டெல்லி சலோ போராட்டத்தில் 4 விவசாயிகள் பலியாகி உள்ளனர்.

The post பஞ்சாப்-அரியானா எல்லைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி: டெல்லி சலோ போராட்டம் 29ம் தேதி வரை நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: