வைத்தீஸ்வரன்கோயில் ₹1.10 கோடியில் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம்

*பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் தகவல்

சீர்காழி : வைத்தீஸ்வரன்கோயில் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ₹1.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தெரிவித்தார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி அவை கூடத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அன்புச் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் பாமா மன்ற பொருட்களை படித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

வித்யா தேவி பேசுகையில், மருவத்தூர் செல்லும் சாலையில் பெயர் பலகை அமைக்க வேண்டும். விழுக்காடு பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
சாந்தி சியாமளா பேசுகையில், ரயில்வே ரோடு சாலையில் கோயில் திருவிழா நடக்க இருப்பதால் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்றார்.மீனா பேசுகையில், இந்திரா நகர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் பேசுகையில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பேரூராட்சிக்கு கூடுதல் நிதி கிடைத்த பிறகு பேரூராட்சியில் உள்ள அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்யப்படும். வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ₹1 கோடியே 10 லட்சம் செலவில் புதிய 8 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புதிய கழிப்பறை கட்ட ₹5.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ₹63 லட்சம் செலவில் 6 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் ₹45 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது என்றார்.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post வைத்தீஸ்வரன்கோயில் ₹1.10 கோடியில் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: