மதுரையில் 27ம் தேதி ஓபிஎஸ், டிடிவியை சந்திக்கும் மோடி: கதவை சாத்திய எடப்பாடி ; மதில் மேல் பூனையாக பாமக, தேமுதிக, தமாகா: கூட்டணிக்கு திண்டாடும் பாஜ

அதிமுக-பாஜ கூட்டணி முறிவுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எந்த பக்கம் சாய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர். காரணம் பாமக, தமாகா ஆகிய கட்சிகள் அதிமுக தயவால் ஒரு ராஜ்சபா சீட் வாங்கி அன்புமணி மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் எம்பியாக உள்ளனர். தொடர் தோல்விகள், கூட்டணி முறிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜவுக்கும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட பல கட்சிகளுடன் ஒரே நேரத்தில் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே நாம் டெபாசிட்டையாவது தக்க வைத்து கொள்ளலாம் என்று பாஜ மூத்த தலைவர்கள் டெல்லி மேலிடத்துக்கு தெரிவித்தனர்.

இதனால், எடப்பாடியின் உறவினர்கள் மீது அமலாக்கத்துறை, வருமானத்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை காட்டி கூட்டணிக்கு இழுத்துவிடலாம் என்று பாஜ கணக்கு போட்டது. இதற்காக கடந்த 2 மாதமாக தங்கமணி, வேலுமணி ஆகியோர் மூலம் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், எடப்பாடி கூட்டணிக்கு பிடி கொடுத்து பேசாததால் பாஜவின் 2 மாத முயற்சி தோல்வியில் முடிந்தது. எடப்பாடியின் பிடிவாதத்தால் இதற்கு மேல் இறங்கி சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடந்த வேண்டாம் என்று அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாஜ தலைமையில் தனி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணியில் டிடிவி, ஓபிஎஸ், சசிகலா, தேமுதிக, பாமக, புதிய தமிழக, தமிழக முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகளுடன் புதிய கூட்டணையை உருவாக்க பாஜ பேச்சுவார்த்தை நடத்தியது. உஷாரான எடப்பாடி தேமுதிக மற்றும் பாமகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிரமேலதாவுடனும், பாமக எம்எல்ஏக்கள் மூலமும் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த இரு வாரத்துக்கு முன் சென்னைக்கு பாஜ தேசிய தலைவர் நட்டா வந்தார். அப்போது கூட்டணி அறிவிப்பு குறித்து வெளியிட பாஜ திட்டமிட்டு இருந்தது. ஆனால், பாஜவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் அதிக சீட்டுகள், தேர்தல் செலவுக்கு பணம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தைகள் வைத்தன. இதனால், கூட்டணியை இறுதி செய்ய முடியாததால், எந்த கட்சி தலைவர்களையும் சந்திக்காமல், பாஜ நிர்வாகிகளுக்கு நட்டா டோஸ்விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணம் வரும் 27ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது கூட்டணியை இறுதி செய்ய வேண்டும் என்று பாஜ திட்டமிட்டுள்ளது. வரும் 27ம் தேதி பல்லடம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மாலை 5 மணிக்கு மதுரை பிரதம ர் மோடி வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மதுரையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அன்றிரவு தங்குகிறார். அப்போது, பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டதாகவும், பிரதமர் தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தானும் பிரதமரை சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ்சிடம் கூறினாராம். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் டெல்லி மேலிடத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஒரே நேரத்தில் பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இருவரும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் பிரதமரிடம் ெதரிவிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை பிரதமரிடம் ஓபிஎஸ் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்த பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜெயலலிதா மறைவு, எடப்பாடி பொதுச்செயலாளரான பிறகு ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து பயணிக்க போவதாக அறிவித்த பிறகு முதல்முறையாக ஒருவரும் சேர்ந்து மோடியை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுரையில் 27ம் தேதி ஓபிஎஸ், டிடிவியை சந்திக்கும் மோடி: கதவை சாத்திய எடப்பாடி ; மதில் மேல் பூனையாக பாமக, தேமுதிக, தமாகா: கூட்டணிக்கு திண்டாடும் பாஜ appeared first on Dinakaran.

Related Stories: