சத்தியமங்கலம் – அத்தாணி சாலையோரம் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் அரசு கலைக் கல்லூரி, தனியார் தொழில்நுட்ப கல்லூரி,தனியார் கலை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இச்சாலை வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூர், பவானி, ஆப்பக்கூடல், கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் – அத்தாணி சாலையில் எம்ஜிஆர் நகர் அருகே சாலையோரத்தில் வாழைக் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இந்த வழியாக கேரளாவிற்கு வாழைக்காய் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் பாரத்தை இறக்கி விட்டு திரும்பி வரும்போது இப்பகுதியில் வாழை சருகுகளை கீழே சாலையோரம் கொட்டி விட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதன் காரணமாக சாலை முழுவதும் புகை மூட்டம் பரவுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த புகையை சுவாசிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு அலர்ஜி, ஆஸ்துமா, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் வாழை கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் – அத்தாணி சாலையோரம் குப்பைகளுக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: