2012ல் குஜராத் முதல்வராக மோடி கேட்டது எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி நிற்கும் மாநிலமா? இப்போது நாங்கள் கேட்கிறோம்

அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையில் கூறியதாவது: ‘‘எங்கள் மாநிலம் ரூ.60 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசுக்கு தருகிறது. ஆனால், எங்களுக்கு திரும்பக் கிடைப்பது என்ன?. எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி இருக்கும் மாநிலமா?” என்று மாநில உரிமைக்கு உரத்த குரல் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. 2012ம் ஆண்டில் குஜராத் மாநில முதல்வர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி தான். குஜராத்தில் இருந்து அன்று அவர் கேட்டதை இன்று தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் கேட்கிறோம். 2021-22ம் ஆண்டு செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலம் ஒன்றிய அரசு ரூ.5.85 லட்சம் கோடியை திரட்டியது. இதேபோல், 2022-23ல் ரூ.6.19 லட்சம் கோடி, 2023-24ல் ரூ.6.5 லட்சம் கோடி மற்றும் 2024-25ல் ரூ.6.95 லட்சம் கோடியை திரட்டியது.

ஒரு கற்பனைக்கு, ஒருவேளை ஒன்றிய அரசு, கூட்டாட்சித் தத்துவத்தை கடைபிடித்து இத்தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்திருந்தால், தமிழ்நாட்டிற்கு 2021-22ல் ரூ.9 ஆயிரம் கோடி, 2022-23ல் ரூ.10,300 கோடி, 2023-24ல் ரூ.10,900 கோடி மற்றும் 2024-25ல் ரூ.11,600 கோடி கிடைத்திருக்கும். இந்த அளவுக்கு, மாநில அரசின் பற்றாக்குறை, கடன்சுமை குறைந்திருக்கும். இது தமிழ்நாட்டைச் சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை. இது அனைத்து மாநிலங்களைச் சார்ந்த பிரச்னை. மாநில அரசுகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது திமுக அரசு. எனவே, ஒன்றிய அரசு இந்த நியாயமற்ற முறையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2012ல் குஜராத் முதல்வராக மோடி கேட்டது எங்கள் மாநிலம் என்ன கை ஏந்தி நிற்கும் மாநிலமா? இப்போது நாங்கள் கேட்கிறோம் appeared first on Dinakaran.

Related Stories: