வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரமோற்சவ தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவொற்றியூர், பிப்.22: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. காலையில் உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் கோயில் வளாகத்தில் ஒய்யாரி நடனத்துடன், சந்திரசேகரர்-மனோன்மணி தாயார் அலங்கரிக்கப்பட்ட 41 அடி உயர தேரில் எழுந்தருளினர். அதைதொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். இதில் கலாநிதி வீராசாமி எம்.பி, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, சமத்துவ மக்கள் கழக மாநில மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டு 108 கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்கள் புடைசூழ, சிலம்பாட்டம், பரதநாட்டியம், 108 சங்க நாதம் முழங்க திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 4 மாட வீதிகளை சுற்றி வந்து மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அப்போது வீடுகளின் அருகில் பக்தர்கள் தேருக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நீர் மோர், பழங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாசி திருவிழாவின் 9ம் நாள் உற்சவமான திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. அதைதொடர்ந்து 63 நாயன்மார்களின் வீதி புறப்பாடு உற்சவமும் நடைபெறும்.

The post வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரமோற்சவ தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: