தலித், ஓபிசி, சிறுபான்மையினர் மோடியின் ராம ராஜ்ஜியத்தில் வேலைவாய்ப்பு பெற முடியாது: ராகுல் குற்றச்சாட்டு

கான்பூர்: ‘மோடியின் ராம ராஜ்ஜியத்தில் தலித், ஓபிசி, சிறுபான்மையினர் வேலைவாய்ப்புகளை பெற முடியாது. அவர்களிடம் பாகுபாடு காட்டப்படுகிறது’ என இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் தனது நீதி யாத்திரையில் நேற்று பேசியதாவது: நாட்டில் 50 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 15 சதவீதம் பேர் தலித்கள், 8 சதவீதம் பேர் பழங்குடியினர், 15 சதவீதம் பேர் சிறுபான்மையினர். இப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதமாக இருக்கும் இவர்கள் மோடியின் ராம ராஜ்ஜியத்தில் வேலை பெற முடியாது. நீங்கள் எவ்வளவுதான் கூக்குரலிட்டாலும் வேலைவாய்ப்பை பெற முடியாது. வர்க்கமும் சாதியும் இந்தியாவை பிளவுபடுத்தி உள்ளது. இதனால் ஊடகத்திலோ, பெரிய தொழில் நிறுவனத்தினலோ, அரசின் உயர் பதவிகளிலோ தலித் அல்லது பிற்படுத்தப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லை.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் எத்தனை பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினர் பங்கேற்றனர்? ஜனாதிபதியே அழைக்கப்படவில்லையே? நாட்டின் மொத்த செல்வமும் இரண்டு, மூன்று சதவீத மக்களின் கைகளில் உள்ளது. அதானி, அம்பானி, டாடா, பிர்லா போன்றவர்கள்தான் உங்களை ஆள்கிறார்கள். இவர்கள் தான் புதிய இந்தியாவின் மகாராஜாக்கள். இவ்வாறு ராகுல் கூறினார்.

* பிப். 26 முதல் மார்ச் 1 வரை யாத்திரை ஓய்வு

நீதி யாத்திரையில் இன்றும், நாளையும் ஓய்வு நாட்களாகும். யாத்திரை மீண்டும் 24ம் தேதி உபி மொராதாபாத்தில் இருந்து தொடங்கும். அதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 2 நிகழ்ச்சிகளில் ராகுல் உரையாற்ற உள்ளார். மேலும், டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதனால் வரும் 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை யாத்திரைக்கு இடைவெளி விடப்பட்டிருக்கிறது.

The post தலித், ஓபிசி, சிறுபான்மையினர் மோடியின் ராம ராஜ்ஜியத்தில் வேலைவாய்ப்பு பெற முடியாது: ராகுல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: