மக்களவை தேர்தல்: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 லோக் சபா தொகுதிகளில் போட்டியிட இன்று அதிமுக விருப்ப மனு விநியோகம்..!!

சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக-வில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறலாம் என திமுக முதல் கட்சியாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது கட்சியாக அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 புதன்கிழமை முதல் 1.3.2023 வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவங்கள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ.20,000 மற்றும் தனித்தொகுதிகளுக்கு ரூ.15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மக்களவை தேர்தல்: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 லோக் சபா தொகுதிகளில் போட்டியிட இன்று அதிமுக விருப்ப மனு விநியோகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: