திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி நடைபெறும்: விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகளுக்கான சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண உயர்வு மற்றும் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் கடந்த 13ம் தேதி டெல்லி நோக்கி பேரணி புறப்பட்டனர்.

கடந்த 2020ம் ஆண்டைப் போல மீண்டும் டெல்லியில் பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க போலீசார் மாநில எல்லையிலேயே விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால், பஞ்சாப், அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் நீண்ட வரிசையில் குவிந்தனர். அதே சமயம் விவசாயிகளை சமாதானப்படுத்த கடந்த 8, 12, 15ம் தேதிகளில் 3 கட்டமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். பருப்பு, சோளம், பருத்தி பயிர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என ஒன்றிய அரசு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசின் பரிந்துரையை விவசாயிகள் ஏற்காமல் நிராகரித்ததால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய அரசின் முன்மொழிதலை ஏற்க மறுத்த விவசாயிகள் திட்டமிட்டபடி நாளை டெல்லிக்குள் நுழையவுள்ளனர். ஒன்றிய அரசு அளித்த பரிந்துரை குறித்து விவாதிக்க இரு நாட்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி சர்வான் சிங் பேசுகையில்; ஹரியானாவில் உள்ள தற்போதைய சூழல் காஷ்மீரைப் போன்று உள்ளது. நாங்கள் டெல்லிக்குள் நுழையக் கூடாது என ஒன்றிய அரசு நினைக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாவிடில் எங்களை போராட்டம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

The post திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி நடைபெறும்: விவசாயிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: