ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு: ஒன்றிய அரசுக்கு எதிராக செங்கல்பட்டில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகளை செயல்படாமல் முடக்கிய அதிகார போதை கொண்ட ஒன்றிய வரித்துறையை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கருப்பு கொடியுடன் பேரணியாக சென்ற 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், அதிகார போதை வெறிபிடித்த பாரதிய ஜனதா வெளியேறு, இந்திய நாட்டை விட்டு வெளியேறு, ஏழை வயிற்றில் அடிக்காதே, ஜாதி, மத வெறிபிடித்த மோடி அரசு, காங்கிரஸ் வங்கி கணக்கை முடக்காதே,

இந்திய மக்களை ஏமாற்றாதே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை அடக்காதே நாங்கள் அடங்க மாட்டோம், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாதுரை. மறைமலைநகர் நகர தலைவர் தனசேகர், பழவேலி ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் ராஜ், ஓபிசி மாநில துணை தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: