நிறைவான செல்வம் அருளும் ஸ்ரீநிதீஸ்வரர்

இன்றைய உலகில் பலபேர் பல விஷயங்களுக்காக செல்வம் இல்லாமல் தவிப்பதை கண்கூடாக பார்க்கிறோம். அந்தளவிற்கு செல்வத்தின் தேவை அதிகரித்துவிட்டது. சிலருக்கோ, செல்வம் சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு செல்வத்தை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருகின்றார் விடைவாகனரான ஸ்ரீநிதீஸ்வரர். எங்கு? அன்னம்புத்தூரில். இந்த அன்னம்புத்தூரில்தான் அன்னவாகனரான பிரம்மாவும், செல்வத்திற்கு அதிபதியான குபேரனும், ஸ்ரீநிதீஸ்வரப் பெருமானை வழிபட்டு, திருவருள் பெற்றுள்ளனர். அதன் விவரங்களை பார்ப்போமா.?

பிரம்மா

அன்னவாகனன் என்றழைக்கப்படும் படைப்புக் கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும், ஈசனோடு போட்டியிட்டு, அவரது அடிமுடியைத் தேடிச் சென்றனர். ஸ்ரீ ஹரியோ, வராக உருவம் எடுத்து, பூமியை ஆழத்தோண்டினார். சிவனது அடியை காணக் கிடைக்காமல் உண்மையை ஒப்புக் கொண்டு, சர்வேஸ்வரரிடம் பணிந்து நின்றார். அன்னப்பறவையாய் உருமாறிய பிரம்மதேவன், மகாதேவரது முடியைக் கண்டுவிட்டதாக பொய் கூறினார். இதனால் பெருங்கோபம் கொண்ட பரமேஸ்வரர், பிரம்மாவை அன்னப் பறவையாகவே இருக்கும்படி சபித்தார். விமோசனம் தேடிய பிரம்மா, இப்பூலகை அடைந்து, பொய்கை ஒன்றை உண்டாக்கி, அந்த நீரினால் இத்தலத்தின் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து, பலகாலம் மகேசரை மனமுருகி வேண்டி நின்றார். மகிழ்ந்த ஈசர், ரிஷபாரூடராய் திருக்காட்சி தந்து, பிரம்மனது அன்ன உருவினை நீக்கி, அருள் புரிந்தார். மீண்டும் பிரம்மாவுக்கு உயிர்களைப் படைக்கும் உன்னதப் பணியை அளித்தார். பிரம்மா அன்னபறவை உருவில் இங்கு சிவ பெருமானை வழிபட்ட காரணத்தால் இத்தலம் அன்னம்புத்தூர் என்று ஆனது.

குபேரன்

பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி மற்றும் சங்க நிதி ஆகிய எட்டு வகையான நிதிகளுக்கும் (செல்வம்) தலைவன் குபேரன். இதனால் “நிதிபதி’’ என்றும் போற்றப்பட்டான். எட்டு திக்பாலர்களுள் ஒருவராகவும், வட திசைக்கு அதிபதியாகவும் திகழ்ந்தான் குபேரன். தனக்கு எப்போதும் அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டியும், எக்காலத்திற்கும் தனாதிபதியாக விளங்கிட வேண்டியும், இத்தல பெருமானை வழிபட்டு, நீங்காத செல்வம் நிலைபெற்றிருக்கும் வரத்தினை குபேரன் பெற்றதாக தல மகாத்மியம் எடுத்துரைக்கின்றது. இதனால், இப்பதி இறைவன், ஸ்ரீ நிதீஸ்வரர் என்றே அழைக்கப்படுகின்றார்.

ஆலயம்

ஊருக்கு மேற்கே ஆலயம், ஏரியின் எதிரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் காணப்படவில்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சந்நதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சந்நதியும் உயரமான மேடை மீது அமைந்துள்ளன. முழுவதும் கல் கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்து. கருவறையுள் கிழக்கே முகம் கொண்டு ஒளிர்கின்றார், ஸ்ரீ நிதீஸ்வரர். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை, நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே, மெய் சிலிர்க்கின்றது. ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி கையில், பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கின்றார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு, இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தென்முகச் சந்நதியில் நின்ற வண்ணம், திருவருள் புரிகின்றாள் ஸ்ரீகனக திரிபுரசுந்தரி. உண்ணாமுலை அம்மன் போல் இரண்டு கரங்களை மட்டுமே கொண்டுள்ளால் இந்த நாயகி. ஆலய வளாகத்துள்ளே தென்மேற்கு மூலையில், ஸ்ரீ லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியரும் தனித் தனியே சந்நதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சந்நதியில், மிகப் பழமைவாய்ந்த துர்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னே புதிய சிலையும் உள்ளது. கிழக்குப் புறத்தில், ஸ்ரீபைரவருடன் ஸ்ரீ தனாகர்ஷண பைரவரும் வீற்றருள்கின்றனர்.

அமைதியான சூழலில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம், பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது. தல விருட்சமாக கொன்றைமரம் திகழ்கிறது. மாமன்னன் இராஜராஜ சோழன் தனது 23-ஆம் ஆட்சியாண்டில், இக்கோயிலைக் கண்டு, வியந்து, வணங்கி, பல திருப்பணிகள் செய்து, நிவேதனங்கள் கொடுத்து, ஸ்ரீ நிதீஸ்வரப் பெருமானை வழிபட்டுள்ளதை இவ்வாலய சோழர்கால கல்வெட்டு உறுதி செய்கின்றது. 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இவ்வாலயம், முற்றிலும் சிதிலமடைந்து மண்மேடாகிவிட்டது. அதன் பின், தற்போது பக்தர்களின் முழு அர்ப்பணிப்பால், கற்கோயில் உருவாக்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

விசேஷங்கள்

நவராத்திரி உற்சவம் இங்கு வெகு சிறப்புடன் அனுசரிக்கப்படுகின்றது. அதில் சப்தமி மற்றும் அஷ்டமியில் சண்டிஹோமமும், பத்தாம் நாள் பார்வேட்டையில் அம்பாள் திருவீதியுலாவும், விமரிசையாக நடத்தப்படுகின்றது. பங்குனி பூசத்தில், வருஷாபிஷேகமும், அன்று மாலை திருக்கல்யாணம் உற்சவமும், சுவாமி – அம்பாள் திருவீதியுலாவும் நடைபெறுகின்றன. திருக்கல்யாணத்திற்கு பெருமாள் ஆலயத்திலிருந்து அம்பாளை வரிசை தட்டுடன் அழைத்துவரும் சம்பிரதாயமும், வாசலில் மாலை மாற்றும் வைபவமும் சிறப்புற நடைபெறுகின்றது. அதோடு, மாத பிரதோஷங்கள், சிவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கிரகப் பெயர்ச்சிகள் போன்ற அனேக விசேஷங்களும் இங்கு பிரசித்தம். தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும். தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

பரிகாரங்கள்

1. பௌர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் பாதத்தில் வெண்ணெய் வைத்து அர்ச்சனை செய்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து, அந்த வெண்ணையைப் பெற்று தம்பதிகளாக சாப்பிட. குழந்தைப் பேறு கிடைப்பது உறுதி.

2. கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில், ஸ்ரீநித்தியகல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட. விரைவில் திருமணம் கைகூடும்.

3. பெண்கள் பூப்படையாத குறை தீர, ஐந்து வியாழக்கிழமைகளில் சுவாமிக்கு சொர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமாகப் பெற்று செல்கின்றனர் பக்தர்கள். அதோடு இந்த பரிகாரத்தினால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்னைகளும் தீரும்.

4. வெள்ளிக் கிழமை, பௌர்ணமி, பூச நட்சத்திரம், அக்ஷய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு ஸ்வர்ணபுஷ்ப அர்ச்சனை செய்து வழிபட, கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமணவரம், குழந்தைவரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

5. குருவின் இரண்டு தெய்வங்களில் ஒருவரான பிரம்மா, இங்கு வழிபட்டதால், குருப் பெயர்ச்சி பரிகார பூஜைகள் இங்கு வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுகின்றன. அதில் பங்கு பெற்று பல நன்மைகளை அடைந்திடலாம். தொடர்புக்கு: 9444036534.

எப்படி செல்வது: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில், திண்டிவனம் – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அன்னம்புத்தூர் அமைந்துள்ளது.

The post நிறைவான செல்வம் அருளும் ஸ்ரீநிதீஸ்வரர் appeared first on Dinakaran.

Related Stories: