உடல் நலனை காக்கும் கார்த்திகை விரதம்

முருகப் பெருமானை நினைத்து கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பான பலனைத்தரும். குறிப்பாக, நீண்ட நாட்களாக உடல்நிலை குன்றி இருப்பவர்கள், இவ்விரதத்தை மேற்கொண்டால், விரைவாகவே உடல் நிலை சீராகிவிடும். இப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், அன்றைய தினம் முருகனை நினைத்து, துதித்து வழிபடலாம். இந்த தொகுப்பில், கார்த்திகை விரதத்தை முன்னிட்டு, முருகப் பெருமானைப் பற்றி சில தகவல்களை அறியலாம்!

ஆறுபடை வீடுகள்

முருகனுக்கு மிகமிக விசேஷமான தலங்களாகச் சொல்லப்படுவது ஆறுபடை வீடுகள். ஆறுபடை வீடுகள் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை. ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறுபடை வீடுகள் என்பது குறித்து முதல் முதலில் நக்கீரரின் திரு முருகாற்றுப்படை இலக்கியத்தில் வருகிறது. அதில் ஆறுபடை என்று வரவில்லை ஆற்றுப்படை என்று வருகின்றது. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல், 317 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. `ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் `வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். “முருகாற்றுப்படை’’ எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. சமய தத்துவங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதற்காகவே ஏற்பட்டன. ஆறு என்றால் வழி என்று பொருள். ஒருவன் வாழ்வில் உயர்வும், உன்னதமும் உய்வும் பெற என்ன வழி என்பதைக் காட்டுவதுதான் ஆறுபடைவீடுகள்.

ஆறுமுகமான பொருள் முருகன்

இந்த ஆறு என்கிற எண், முருகப் பெருமானோடு எப்படித் தொடர்புபடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு.
“ஏறுமயிலேறி விளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே’’.

– என்று ஆறுமுகத்தின் தத்துவத்தை அருணகிரிநாதர் அற்புதமாகப் பாடுகின்றார்.

சடாட்சர மந்திரம்

முருகப் பெருமானின் மந்திரம் “சடாட்சர மந்திரம்”. ஆறு எழுத்துக்களை உடைய மந்திரம், “சரவணபவ” எனும் மந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சூட்சுமத் தத்துவத்தைக் குறிக்கிறது. சரவணபவ மந்திரத்தின் விளக்கத்தை வள்ளலார் அருளியிருக்கிறார்.

ச – என்பது உண்மை;
ர – என்பது விஷய நீக்கம்;
வ – என்பது நித்ய திருப்தி;
ண – என்பது நிர்விஷயம்;
ப – என்பது பாவ நீக்கம்;
வ – என்பது ஆன்ம இயற்கைக் குணம்.

இதை இன்னும் பல விதமாகவும் சொல்லுவார்கள். யோக சாஸ்திர அடிப்படையிலும் சொல்லுவார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு படை வீடு உண்டு. ஆறு எழுத்துக்கும் ஆறுபடை வீடு. முருகனுக்கு உரிய விரதம் சஷ்டி விரதம். அது ஆறாவது திதி. எண்கணித சாஸ்திரத்தில் ஆறு என்கிற எண் சுக்கிரனைக் குறிக்கிறது. சுக்கிரன் செல்வத்தைக் குறிக்கக்கூடிய கிரகம். இகத்திலும் பரத்திலும் ஒருவனுக்குத் தேவையான எல்லா ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய, சுக்கிரனின் ஆதிக்கம் உடைய, ஆறு என்கின்ற எண்ணின் தத்துவமாக விளங்குபவர் முருகப் பெருமான்.

காவடிச் சிந்து தந்த முருகன்

இசை வடிவங்களில் புகழ் பெற்ற எளிய மக்களால் பாடக்கூடிய வடிவம் காவடிச்சிந்து. தைப் பூசத்தன்று பக்தர்கள் பல பகுதிகளிலிருந்தும் பாத யாத்திரையாகப் பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக்கடனாக விரதமிருந்து முருகனுக்குக் காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் எடுத்து வருபவர்கள், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது.

காவடி வகைகள்

கண்ணுக்கும், காதுக்கும், நெஞ்சுக்கும் பக்தி உருக்கத்தைத் தரும் முருகப் பெருமானுக்கு எண்ணற்ற பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள் அந்த காவடியிலேயே எத்தனை எத்தனை வகைகள்?
1. அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோயிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
2. சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
3. தீர்த்தக் காவடி – கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
4. பறவைக் காவடி – அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
5. பால் காவடி – பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
6. மச்சக்காவடி – மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
7. மயில் காவடி – மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
இது தவிர, சர்ப காவடியும் உண்டு. நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் காவடி எடுத்துக் கொண்டு முருகனின் பாடல்களைக் பாடிக் கொண்டு, அற்புதமான நாதஸ்வர இசையோடு வருவது மனதை உருக்கும்.

பத்துமலை முருகன் கோயில்

மலேசியாவில், கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது, பத்து மலை முருகன் கோயில். இது ஒரு மலைக் கோயில்; சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலைக் கோயிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

The post உடல் நலனை காக்கும் கார்த்திகை விரதம் appeared first on Dinakaran.