ஜாதகமும் வாழ்க்கையும்

ஜாதகம், ஜோதிடம் எல்லாமே ஆன்மிகத்தோடு சம்பந்தப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். அது அன்றாட வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைக்காது. அன்றாட பிரச்னையைச் சமாளிப்பதற்குத் தான் அறிவு (மதி) கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவை பலப்படுத்திக் கொண்டால், தனக்குரிய எதிர்காலத்தை நிர்ணயித்துவிட முடியும். ஒருவர் எடுத்ததற்கெல்லாம் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, நாள் நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருந்தாலோ, அவருடைய செயல்களில் தடைகள்தான் ஏற்படும்.‘‘நாளைப் பார்த்துக் கொள்ளலாம்’’ ‘‘இன்று நாள் நன்றாக இல்லை’’ என்று நினைக்கின்ற பொழுது, பல வாய்ப்புகள் அவர் கண்ணுக்குத் தெரியாமலேயே போய்விடும். ஜோதிடம், சில முக்கியமான நேரங்களில் பார்க்கலாம்.

ஒரு வியாபாரத்தைத் தொடங்கப் போகின்றோம், திருமணம் செய்ய வேண்டும் அதற்கு ஒரு நல்ல முகூர்த்த நேரம் பார்க்க வேண்டும், அதற்கு ஜோதிடத்தைப் பார்க்கலாம். ஒரு காலத்தில், மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே ஜோதிடத்தைப் பார்த்தார்கள். எனக்கு தெரிந்து, 50 வருடங்களுக்கு முன்னால் திருமண பொருத்தங்கள் குறித்து பெரிய அளவில் நம்முடைய முன்னோர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் பார்த்த பெண், பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிந்த பெண்ணாகவே இருக்கும். அதைப் போல, பெண் வீட்டாருக்கும் பையனைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால், அவனுடைய குண நலன்கள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பையனுக்கு இந்தப் பெண் என்பதை அவர்கள் எளிதாக நிச்சயத்து திருமணத்தை நடத்திவிடுவார்கள்.

இத்தனை சிரமம் அந்த காலத்தில் கிடையாது. மிக முக்கியமாக, “மனப்பொருத்தம்’’ மட்டுமே பார்க்கப்பட்டது. அந்த மனப்பொருத்தம் இருந்துவிட்டால் எல்லாப் பொருத்தமும் அதில் அடங்கிவிடும். திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது, இப்பொழுதுதான் மிக அதிகமாக இருக்கிறது. இதில் சாதகத்தைவிட பாதகம் அதிகமாக இருப்பதையும், நடைமுறையில் பார்க்கிறோம்.

என்ன பாதகம் தெரியுமா?

பெரும்பாலான ஜோதிடர்கள் மேலோட்டமாகப் பார்த்து, சேரக்கூடிய ஜாதகத்தை சேராத ஜாதகமாகவும், சேராத ஜாதகத்தை சேரக்கூடிய ஜாதகமாகவும் சொல்லிவிடுவதால், பல குழப்பங்கள் நேர்ந்து வாழ்க்கை கெட்டு, வழக்கு மன்றம் வரை போய் நிற்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதைவிட மிக முக்கியம் குணம், குடும்பப் பின்னணி இவைகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, என்ன வேலையில் இருக்கிறான், என்ன சம்பளம்? என இரண்டும் நிறைவடைந்துவிட்டால், குணங்கள் சற்று ஏறுமாறாக இருந்தாலும்கூட, போகப் போக சரியாகும், என்று நினைத்து திருமணம் செய்துவிட்டு அவஸ்தைப் படுகின்றார்கள். இதில் இன்னொரு வேடிக்கையும் நடக்கிறது.
தங்களுக்கு அந்தப் பெண் அல்லது பையன் பிடித்துவிட்டது, எப்படியும் அந்தச் சம்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, ஜாதகம் சரியாக இல்லாவிட்டாலும்கூட, வெவ்வேறு ஜோதிடர்களிடம் தொடர்ச்சியாகக் காட்டி, எந்த ஜோதிடர் ஜாதகம் சரியாக பொருந்துகிறது என்று சொல்லுகின்றார்களோ, அதையே வேதவாக்காகக் கொண்டு முடித்து விடுகின்றார்கள். என்னிடம் வருகின்ற சில விவாகரத்து ஜாதகங்களில், “நான், ஜாதகம் பார்த்துத் தானே செய்தீர்கள்?” என்று கேட்கும் பொழுது “ஆமாம் பார்த்துத் தான் செய்தோம். இரண்டு ஜோசியர் திருமணம் வேண்டாம் என்று சொன்னார். மூன்றாவது ஜோசியர் பரவாயில்லை செய்யலாம் என்று சொன்னார். நாங்கள் செய்து விட்டோம்” என்று சொல்கிறார்கள்.

ஒரு ஜாதகத்தில் மூன்று ஜோதிடர்கள் வெவ்வேறு பலனை எப்பொழுது சொல்கிறார்களோ, அப்பொழுது அது ஒரு குழப்பமான விஷயமாகத் தானே முடியும்? இதற்கு ஒரு முறை, நன்றாக விசாரித்து, அந்தத் திருமணத்தை முடித்து இருந்தால், நிம்மதியாக இருந்திருக்குமே! தோஷம் என்று சொல்லி, ஜாதகங்களை கழித்துக் கட்டி, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் திருமணம் தள்ளி போய், வாழ்க்கையே சிக்கலாகி விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
அதை போலவே பெண் வீட்டார், வயது 32, 33 ஆகியும்கூட, ஜாதகம் சரியாக அமையவில்லை என்று காத்திருந்து, காத்திருந்து, பெண்ணுக்கு வயது ஏறுவதைப் பற்றிக் கவலைப் படாமலே இருப்பதையும் பார்க்க முடிகிறது. 50 வருடங்களுக்கு முன், கல்யாணம் ஆகாத ஜாதகங்கள் என்பது மிக அபூர்வமாகத்தான் இருக்கும். வேலை உள்ளவர், விவசாயம் பார்ப்பவர், கடை வைத்திருப்பவர், கூலி வேலை செய்பவர் என்று எல்லோருக்கும் அன்று திருமணம் ஆனது. அப்போது இந்த தோஷங்கள் எல்லாம் வேலை செய்யவில்லை.

பெண்களுக்கு 24 – 25 வயதுக்குள் அனேகமாக திருமணம் நடந்துவிடும்.25 வயது என்பது மிக அதிகமாக இருந்தது. அதனால், குறிப்பிட்ட காலத்தில் குழந்தை குட்டிகளைப் பெற்று, அந்த குழந்தைகளை நன்கு வளர்த்து, தங்கள் காலத்துக்குள் பேரன் பேத்திகளையும் பார்த்து நிறைவாழ்வு வாழ்ந்தார்கள். இன்று 40 வயதில் திருமணம் ஆகி, குழந்தைப் பேறு தள்ளிப் போய், பிறகு என்னென்னவோ வைத்தியம் பார்த்து, 50 – 52 வயதில் குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தை 25 வயது ஆவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஜோதிடமா? ஜாதகமா? அல்ல. அது இருக்கிற மாதிரிதான் இருக்கிறது. அப்போதெல்லாம் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த கட்டத்தில் இருந்தனவோ, அதே கட்டத்தில், அதே கிரகங்கள் இப்பொழுதும் இருக்கின்றன. ஆனால், நம்முடைய மனம் வேறு மாதிரியாக வேலை செய்கின்ற பொழுது, ஜாதகமும் வேறு மாதிரியாக வேலை செய்யும். ஜாதகத்தின் மிக முக்கியமான நுட்பத்தை நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகின்றேன். உங்களுடைய ஜாதகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், நீங்கள் உங்களுடைய மனதை மிக பலமாக வைத்துக் கொண்டு, எப்பொழுதும் நேர்மறை சிந்தனையோடு இருந்தால், உங்களுக்கு எதிர்மறையாக செயல்படும் கிரகங்கள்கூட அடக்கி வாசிக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நல்ல சிந்தனை, தெய்வபக்தி.ஜோதிடத்தை மதிக்க வேண்டுமே தவிர, அதை ஒவ்வொரு நிமிஷத்திற்கும் பார்த்துக் கொண்டு, அதனை ஒட்டி நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்ள முடியாது.

இதைவிட இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லுகின்றேன். நம்முடைய வாழ்க்கை என்பது, இறைவனால் ரகசியமாக நமக்கு அளிக்கப்பட்ட வரம். நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்க்கின்றீர்கள். அந்தத் திரைப்படத்தின் கதையை, பக்கத்திலிருந்து ஒருவர் சொல்லிக் கொண்டே வருகின்றார். ‘‘கதாநாயகன் வருவான். இப்பொழுது வில்லன் வருவான். ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கும். அதிலே வில்லனை கதாநாயகன் வென்றுவிடுவான். அப்பொழுது கதாநாயகி வருவாள். இப்பொழுது பாட்டு ஒன்று இருக்கிறது’’ என்று பக்கத்தில் இருந்து ஒருவர் சொல்லிக் கொண்டே இருந்தால், நீங்கள் படம் பார்க்க முடியுமா? அந்த படம் சுவையாக இருக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் நீங்கள் படம் பார்க்கும் பொழுது, உங்களுடைய ரசனையும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். அந்தப் படத்தை முழுமையாக நீங்கள் பார்த்து முடிப்பீர்கள். அதேபோலத்தான் உங்கள் வாழ்க்கையும். நாளைக்கு என்ன நடக்கும்? நாளை மறுநாள் என்ன நடக்கும்? என்று திருப்பி திருப்பி ஆராய்ந்து கொண்டு இருந்தால், உங்கள் வாழ்க்கை ருசிக்காது. அப்படியே சொன்னது சொன்னபடி நடந்தாலும், அதில் என்ன சுகம் இருக்கும்? அதற்காகவா வாழ்க்கை? எப்பொழுதாவது, இக்கட்டு குழப்பம் வருகின்ற பொழுது, ஒரு தெளிவுக்காக ஒருமுறை ஜோதிடம் பாருங்கள். தவறில்லை. ஆனால், அதையே ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.

 

The post ஜாதகமும் வாழ்க்கையும் appeared first on Dinakaran.