ரூ.38.8 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்: கருணாநிதி எம்எல்ஏ அடிக்கல்

தாம்பரம்: பல்லாவரம் சட்டமன்ற தொகுதி, பம்மல் பகுதிகளில் நியாயவிலைக் கடைகள், போலீஸ் பூத், காரியமேடை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நியாய விலை கடைகள், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் காரியமேடை, ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் போலீஸ் பூத் ஆகியவை கட்ட முடிவு திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா பம்மல் பகுதிகளில் நேற்று நடைபெற்றது. இதில், பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், குரோம்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 59ம் ஆண்டு விழா மற்றும் அரசு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கருணாநிதி எம்எல்ஏ கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். பின்னர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, 292 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மேலும் அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிக்கு தேவையான டேபிள், பெஞ்ச் வாங்கி தருவதாகவும், பள்ளிக்கு எல்இடி விளக்குகள், ஜெனரேட்டர் வசதியை தனது சொந்த நிதியிலிருந்து செய்து தருவதாகவும் கருணாநிதி எம்எல்ஏ உறுதி அளித்தார்.

The post ரூ.38.8 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்: கருணாநிதி எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: