காண்டூர் கால்வாயில் கசிவு: வீணாகும் பிஏபி தண்ணீர்

 

உடுமலை, பிப். 18: காண்டூர் கால்வாயில் நீர் கசிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக, காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

காண்டூர் கால்வாய் மொத்தம் 49 கிமீ நீளம் கொண்டது. அடர்வனப்பகுதியில் மலையை குடைந்து பல்வேறு குகைப் பாதைகள் வழியாக இந்த கால்வாய் செல்கிறது.மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும்பொது, வெள்ளப்பெருக்கினால் பல நேரங்களில் கால்வாய் கரைகள் சேதம் அடைவதுண்டு. உடனடியாக அவை சீரமைக்கப்படும்.மேலும், உலக வங்கி நிதியுதவியுடன், காண்டூர் கால்வாய் கான்கிரீட் தளம் போட்டு, பகுதி பகுதியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.மழைக்காலங்களில் கால்வாயில் நீர்வரத்து அதிகரிக்கும்போது, தண்ணீர் திறந்துவிட பல இடங்களில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காண்டூர் கால்வாயில் 43வது கிலோமீட்டர் மாலுவான் சுற்று பகுதியில் ஷட்டர் உள்ளது. இந்த ஷட்டரில் தற்போது நீர்கசிவு ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. தினசரி 10 கனஅடி வரை நீர் வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காண்டூர் கால்வாயில் கசிவு: வீணாகும் பிஏபி தண்ணீர் appeared first on Dinakaran.

Related Stories: