பா.ஜவை வீழ்த்துவதற்கு 2029 தேர்தல்தான் எங்கள் இலக்கு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற கெஜ்ரிவால் சூளுரை

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘2024 மக்களவை தேர்தலில் பாஜ வென்றாலும், 2029ல் பாஜவை ஆம் ஆத்மி வீழ்த்தி நாட்டை விடுவிக்கும்’ என சூளுரைத்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க, எம்எல்ஏக்கள் தலைக்கு ரூ.25 கோடி தருவதாக பாஜ பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கெஜ்ரிவால் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது.

விவாதத்தில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘‘ஆபரேஷன் தாமரை மூலம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, டெல்லியில் எங்கள் அரசை கவிழ்க்க பாஜ முயற்சிக்கிறது. 2 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி தருவதாக பாஜ கூறியதாக அவர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர். ராம பக்தர் என கூறிக் கொள்பவர்கள் எங்கள் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கான மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். கடந்த காலத்தில் என் மீது மை வீசினார்கள், செருப்பு வீசினார்கள் இப்போது என்னை கைது செய்ய விரும்புகிறார்கள். என்னை கைது செய்வதன் மூலம் ஆம் ஆத்மியை முடக்கிவிடலாம் என எண்ணுகின்றனர். பாஜவுக்கு மிகப்பெரிய சவாலாக ஆம் ஆத்மி இருப்பதால் அனைத்து தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. 2024 மக்களவை தேர்தலில் வேண்டுமானாலும் பாஜ ஜெயிக்கலாம், ஆனால் 2029 தேர்தலில் பாஜவை வீழ்த்தி, அக்கட்சியிடமிருந்து நாட்டை ஆம் ஆத்மி விடுவிக்கும்’’ என்றார். இதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், குரல் வாக்கெடுப்பு மூலம் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது.

* 62ல் 54 பேர் பங்கேற்பு அந்த 8 பேர் எங்கே?

மொத்தம் 70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்களும், பாஜவுக்கு 8 எம்எல்ஏக்களும் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் நேற்று 54 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களே பங்கேற்றனர். இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘எங்கள் எம்எல்ஏக்கள் யாரும் கட்சி மாறிவிடவில்லை. 2 பேர் சிறையில் உள்ளனர். மற்ற சிலர் வெளியூரில் இருப்பதாலும், உடல்நிலை சரியில்லாததாலும் அவைக்கு வர முடியவில்லை’’ என்றார்.

The post பா.ஜவை வீழ்த்துவதற்கு 2029 தேர்தல்தான் எங்கள் இலக்கு: நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற கெஜ்ரிவால் சூளுரை appeared first on Dinakaran.

Related Stories: