காஞ்சிபுரத்தில் இன்று மாலை ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம்: நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பரசன் வேண்டுகோள்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அதிமுக அரசின் 10 ஆண்டுகால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாக கேட்டறிந்திட தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் (விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்) என்ற தேர்தல் பரப்புரையை நடத்தி, அராஜக அதிமுகவை மக்கள் நிராகரிக்கப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து, தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரை கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டார்.

அதன்படி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சார்பாக, “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில், காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி அருகில், மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் இன்று (18ம்தேதி) மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், எம்எல்ஏக்கள் எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்று பேசுகிறார்.

கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். காஞ்சிபுரம் மாநகரில் நடைபெறும் இப்பொது கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒன்றிய, நகர, பேரூர், சிற்றூர்களில் இருந்தும் திமுகவினர் அனைவரும் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டு வந்து பங்கேற்று, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு – திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய அனைவரும், காஞ்சி மாநகருக்கு அலைகடலென திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரத்தில் இன்று மாலை ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம்: நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பரசன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: