புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

 

சென்னை: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாயில் ரோடமைன் – பி என்ற வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த வாரம் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் இவ்வகை பஞ்சு மிட்டாய்களை தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்யவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆய்வின் முடிவுகள் வெளியானது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சிமிட்டாய் ரோடமைன் பி என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும் பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக் கூடாது எனவும் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரைத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமைன் -பி எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 ன்படி ரோடமைன் -பி எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் – 2006 படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் குறிப்பாக வடமாநில வாலிபர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை, பொதுழுது போக்கு மையங்கள் மட்டுமின்றி தெருவிலும் அவர்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

The post புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: