அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.68 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்: முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார், செல்வம் எம்பி பங்கேற்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.68 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இதில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தீட்டாளம் ஊராட்சியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் மூலமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.68 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, அதில் பள்ளி மாணவ, மாணவிகளை கவரும் விதத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்தவுடன் பள்ளி சிறுவர், சிறுமியர், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் எம்பி செல்வம் கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பள்ளி மாணவ, மணவிகளுக்கு உணவு வழங்கினார். மேலும் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பேனா, பென்சில், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தம்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி பாஸ்கர் ராவ், மாவட்ட கவுன்சிலர் மாலதி, ஒன்றிய குழு உறுப்பினர் சிவபெருமான், ஊராட்சி மன்ற தலைவர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.68 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள்: முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார், செல்வம் எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: