சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை; சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17-02-2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: