பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாலை மறியல் போராட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஸ்டேட் பேங்க் அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட துணை தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் அர்ஜீன்குமார், ஆட்டோ சங்க நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய விலை பொருட்களுக்கு கட்டுபடியாக கூடிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், 100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட திருத்தம், மின்சார விநியோக சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கக் கூடாது, படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், சாலை மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உட்பட 215 பேர் கைது செய்யப்பட்டு மதுராந்தகம் திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: