தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்தும் நம்பிக்கை மையங்களை மூடும் ஒன்றிய அரசு: தமிழக அரசு தடுக்க வேண்டும்; ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் ஒன்றிய அரசின் முடிவை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்க மாநில துணை தலைவர் ரவி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனையில் செயல்படும் நம்பிக்கை மையங்களை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. இந்த, நம்பிக்கை மையங்களை குறைக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, எய்ட்ஸ்சால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வருகின்றனர்.

மேலும், எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு ஊசி அல்லது முற்றிலும் குணப்படுத்த கூடிய மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை, எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு எடுத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமும், உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் மூலம், அவர்களுடைய கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் மூலமே எச்ஐவி தொற்றில்லா குழந்தைகளை பெறமுடியும். தமிழகத்தில் தற்பொழுது 1.40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் ஏ.ஆர்.டி மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒன்றிய அரசு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அதிர்ச்சிகரமாக உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூடினால் எய்ட்ஸ் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஏழை, எளிய மக்களின் நலன்கருதி நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என தமிழ்நாடு முதல்வர் கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றை கட்டுப்படுத்தும் நம்பிக்கை மையங்களை மூடும் ஒன்றிய அரசு: தமிழக அரசு தடுக்க வேண்டும்; ஊழியர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: