உத்திரமேரூரில் தெப்போற்சவ விழா

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை தெப்போற்சவ விழா துவங்கியது. இதை முன்னிட்டு, ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து, பூக்களினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாடவீதிகளில் வீதியுலாவாக வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தீபாராதனை காட்டியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க கோயில் குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி கோயில் குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்போற்சவ விழாவின் முதல் நாளான நேற்று குளத்தை தம்பதி சமேதராக ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

The post உத்திரமேரூரில் தெப்போற்சவ விழா appeared first on Dinakaran.

Related Stories: