தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் வணிகவியல் பிஏ துறையின் மாணவர் மன்ற துவக்க விழா

 

தொண்டாமுத்தூர், பிப்.16: தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பிஏ துறையின் மாணவர் மன்ற துவக்க விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சக்திஸ்ரீ அம்மா தலைமை உரை வழங்கினார். தொடர்ந்து அவர், தனது உரையில் வணிகவியல் துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் மேலும் எந்த விதமான வேலை வாய்ப்புகளுக்கு அவர்கள் தயாராக வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

மேலும் மாணவர்கள் தவறுகளுக்கு எவ்வாறு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் அவர்களுடைய பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். இவ்விழாவில், கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையின் இயக்குனர் முனைவர் டி.குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் மன்றத்தை தொடங்கி வைத்தும் பெரிய கனவுகளும் பெரிய வெற்றிகளும் என்ற தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினார்.

அவர் தனது உரையில் பாரதியின் கவிதைகளை மேற்கோள் காட்டியும் டாக்டர்.ஏபிஜே அப்துல் கலாம், திருபாய் அம்பானி போன்றவர்களை மேற்கோள் காட்டி மாணவர்கள் தங்கள் கனவுகளை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்றும், கனவுகளை வடிவமைக்க பொருளாதாரம் ஒரு தடையாக இல்லை என்பதையும் எடுத்துரைத்தார். அது மட்டுமின்றி இன்றைய மாணவர்கள் தான் அரசாங்கத்தை நிர்ணயிக்கும் சக்தி என்றும் நினைத்ததை நடத்தி காட்டும் தைரியம் மாணவர்களுக்கு உள்ளது என்றும் கூறினார்.

மேலும் இளைஞர்கள் இந்த தேசத்தை கட்டமைக்கும் சிற்பிகள் என்பதையும் கனவுகள் என்பது ஒரு மனிதனை தூங்க விடாத விஷயம் என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார். இவ்விழாவின் துவக்கமாக இத்துறையின் தலைவர் முனைவர் க.பிருந்தா வரவேற்புரை வழங்க மற்றும் முனைவர் ப.சுபத்ரா நன்றி நவிழ விழா இனிதே முடிவுற்றது.

The post தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் வணிகவியல் பிஏ துறையின் மாணவர் மன்ற துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: