மாநில தேர்தல் ஆணையரின் பதவி காலம் 5 ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம்

மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீடிக்க வகை செய்யும் மசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று ஊராட்சி சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி, மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் என உள்ளது. மேலும், இரண்டு முறை அதே கால அளவிற்கு அவரை மீண்டும் நியமிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் 6 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கலாம். அதே நேரத்தில் அவருக்கு 65 வயது நிறைவடைந்தால் பதவியில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில், மாநில தேர்தல் ஆணையர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது நிறைவு ஆகியவற்றில் எது முந்தி நேரிடுகிறதோ, அதுவரை பதவி வகிக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை 5 அல்லது 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இவற்றில் எது முந்தி நேர்கிறதோ அதுவரை நீடிக்கலாம் என்று 2011ல், மாநில தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பணிப் பிரிவு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஒன்றிய ஊராட்சி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே மற்ற மாநிலங்களில் உள்ளபடி, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் கால அளவிற்கு அல்லது 65 வயது வரை, இவற்றில் எது முந்தி நேர்கிறதோ அதுவரை நீடிப்பார் என்றும் அவர் மறுபடியும் பதவி நீடிப்புக்கு தகுதியுடையவராக இருக்கமாட்டார் என்றும் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா நேற்று பேரவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. அதுபோல, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளையை நீக்கும் சட்ட மசோதா உள்பட 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மாநில தேர்தல் ஆணையரின் பதவி காலம் 5 ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: