ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை: முதல்வருக்கு விவசாயிகள் மனு

ஈரோடு: ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனை செய்வதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் சுப்பு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பருவ நிலை மாற்றம், வேளாண் விளை பொருட்களுக்கு விலையின்மை, சந்தைபடுத்துவதில் சிக்கல், ஆட்கள் பற்றாக்குறை, உரம் உள்ளிட்ட சாகுபடி செலவு அதிகரிப்பு என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நாட்டின் உயிர் நாடியான விவசாயம் சிக்குண்டு கிடக்கிறது. கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியாலும், நாபெட் நிறுவனத்தின் கொள்கையற்ற கொள்முதலாலும் தென்னை விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். உள்நாட்டு விவசாயிகள் நிலை இவ்வாறு இருக்க கூடுதல் விலை கொடுத்து பாமாயில் இறக்குமதி செய்வது நியாயமற்றதாகும். அதிலும் உடல்நலனுக்கு உகந்தது அல்ல என மருத்துவர்களால் எச்சரிக்கப்படும் பாமாயிலை இறக்குமதி செய்து மானிய விலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது ஏற்புடையது அல்ல. இதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை அரசு ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கினால், 22 மாவட்டங்களில் உள்ள 20 லட்சம் தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள். சாகுபடி செலவை ஈடுசெய்ய முடியாமல் தவிக்கும் நிலக்கடலை விவசாயிகள் நிலை உயரும். எனவே இது தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை: முதல்வருக்கு விவசாயிகள் மனு appeared first on Dinakaran.

Related Stories: