நின் குறிப்பறிந்து தெளிவாக நடப்பேன்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“நின் கோலம் எல்லாம்” “நின்” என்று உமையம்மை பெயரையும் “கோலம்” என்று வடிவத்தையும் “எல்லாம்” என்று அவற்றில் உள்ள வேறுபாட்டையும் “நின் கோலம் எல்லாம்” என்பதனால் சாக்த சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உருவங்கள் அனைத்தையும், அந்த உருவத்தை வழிபடும் மந்திரத்தையும், மந்திரத்தால் மனதிற்குள் ஏற்படும் மாற்றத்தையும், மாற்றத்தினால் உபாசகனுக்கு கிடைக்கும் கூடுதலான அற்புதச் சக்தியும், அதன்படி உபாசகனின் ஒழுக்க முறையும், ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது. இவை எல்லாவற்றையும் இணைத்து “நின் கோலம் எல்லாம்’’ என்கிறார்.

“நின் குறிப்பறிந்து” என்பதனால் உபாசகன் பஞ்ச சாரிக்கா என்ற தேவதைக்குறிய யந்திர, மந்திர, தந்திர, தியான, அனுபூதி அனைத்தையும், இறை யருள் சேர கைவரப் பெறுவதையே சித்தி என்று குறிப்பிடுவர். அப்படி சித்தி அடைந்தால் தேவதையினால் உபாசகனுக்கு என்றே அளிக்கப்பட்ட தனி அடையாளத்தை ஒவ்வொரு உபாசகனும் அடைய வேண்டும். அந்த அடையாளப்படியே உமையம்மை தோன்றி மறைவாள். அந்த அடையாளம் உபாசகன் இறக்கும் வரை மட்டுமே.

வேறு எவருக்கும் அந்த அடையாளத்துடன் காட்சி யளிக்க மாட்டாள். அந்த வடிவத்துடன் உமையம்மை தொடர்ந்து வந்து பேசுவாள். அப்படி பேசுவது என்பது உபாசகன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் மற்றவர்களுக்கு கேட்காது. அப்படிப் பேசுவது உபாசகனுக்கு புரியும். சிலபேருக்கு உருவமாக தோன்றும். அந்த வகையில் உபாசகனுக்கு அது பேசும் முன்னமேயே எதிர்காலம் புரியும் உபாசகனுக்கு முன்னிலையில் நின்று தேவதை தோன்றும். அப்படித் தோன்றும் நிலையில் அது கூறியவற்றை, தான் தெளிவாக புரிந்து கொள்வதையே “நின் குறிப்பறிந்து” என்கிறார்.

“மனத்தினில்” என்பதனால் இறை அனுபவங்கள் மறவாமல் பொதிந்திருப்பதை குறிப்பிடுகிறார். இத்தகைய மனநிலை உள்ளவர்கள் உலகியலோடு ஒன்றி வாழ மாட்டார்கள். சதா சர்வகாலமும், உமையம்மையின் ஆலயத்தையும், வழிபாட்டையும், அதற்காக நாம் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங் களிலும் அதிகமாக உழல்வர். தேவதையின் உத்தரவின்றி எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டார்கள். தன் குடும்பம், தான் என்று இருக்க மாட்டார்கள். உலகம் அனைத்திற்கும் கஷ்டப்படுவார்கள். இவ்விதமான மனநிலையையே “மனத்தினில்” என்கிறார்.

“குறித்தேன்’’ என்பதனால்தான் இறைவி இடம் கேட்டவற்றையும், அதற்குரிய பதிலை இறைவியே சொன்னவற்றையும் குறிப்பிடுகிறார். அபிராமி அந்தாதியை படிப்போருக்கு, இந்த பாடலை புரிந்துகொள்ள முயல்வோர்க்கு, தான் வந்த வழியை, தனக்கு கிடைத்த அருளை, தான் கொண்ட அனுபவத்தை குறித்தேன் என்பதால் விளக்கமாகச் சொல்லவில்லை. குறிப்பாக, கூறினேன். இந்தக் குறிப்புகளை புரிந்துகொள்ள உபாசகனின் அப்யாசமும், முயற்சியும், நம்பிக்கையும், முதலாவதாகவும், இறையருளை இரண்டாவதாகவும், பெற்றவர்களுக்கு மட்டுமே இதன் பொருளை முழுவதுமாக புரிந்து கொள்ள இயலும் என்பதையே “குறித்தேன்” என்கிறார்.

“மறலி வருகின்ற நேர்வழி மறித்தேன்’’
இந்த வரியானது மீண்டும்மீண்டும்,

உலகில் பிறப்பு அடையாமல் ஆன்மாவை மேல் உலகத்திற்கு அழைத்துச் செல்வது பற்றி குறிப்பிடுகிறது. ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறப்பதற்கு காரணம் ஆசை என்கிறார். ‘ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை’ (32) என்பதனால் அறியலாம். உலகியலில் சில கடமைகளைச் செய்யாமல் இறந்தவர்களுக்குச் செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இறந்தவர்கள் அதை செய்யாமல் இருந்தால் மீண்டும் இவ்வுலகில் பிறப்பர். இதை ‘கரும நெஞ்சால் பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்’ (79) என்பதனால் அறியலாம். அப்படி இல்லாதவாறு தடுத்து இறைநிலையை அடைவதற்கு, சில வைதீகச்சடங்குகள் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த சடங்கின் பயனை உபாசனையே அளித்துவிடும். அதன் பயனை பெற்ற அபிராமிபட்டர் தனக்கு அத்தகைய பிறவி இல்லை உமையம்மை ஆட்கொண்டால் என்பதை ‘கதியுறு வண்ணம் கருது கண்டாய்’ (7) என்பதனால் அறியலாம். அந்த சடங்கை புரிந்து கொள்வதனால் இவ்வரியை புரிந்து கொள்ள முடியும், இறந்த பிறகு ஒரு கல்லை நட்டு அதில் ஆன்மாவை காக்கும் பொருட்டு ருத்ரனை பூஜிப்பர்.

ருத்ரர்கள் இறந்த ஆன்மாக்களுக்கு உயிர்சக்தியை அளித்து உடல் போல் திகழ்வர் தன்னுணர்வு தவறுவர். அப்படி பெற்றால் மீண்டும் பிறவியை அடைய ஆசைப்படுவர். அதற்காகத்தான் இறந்தவர்களுக்கு உப்பின்றி நிவேதனம் செய்வர். பிறக்க வேண்டும் என்ற ஆசையை மாற்றி மேல் உலகத்திற்கு செல்ல ஆன்மாவை ஆயத்தப்படுத்துவர். அதுகுறித்து வழிபடும் கல்லில், பிரம்மாத்மிகா விஷ்ணு ஆத்மிகா, ருத்ராத்மிகா, என்று பூஜிப்பர். அப்படி பூஜிப்பதால் மட்டும் அறியாமையில் சழன்று ஆன்மா மீண்டும் பிறவி எடுக்காமல் மேல் உலகத்திற்கு செல்லும். அப்படி இல்லாமல், கல் நட்டு பூஜிக்கவில்லை என்றால், ஆன்மாவை எமனே அழைத்து செல்வான். மீண்டும் பிறக்கச் செய்வான். அதை மாற்றவே கல் நட்டு பூஜிக்கப்படுகிறது.

இந்த சடங்குகளைப் பற்றி மிகத் தெளிவாக அறிந்தவர், பட்டர். இப்பொழுது நமக்கு ஒரு சந்தேகம் தோன்றும் திறக்காமலேயே அந்தக் கல்லை நட்டு பூஜிக்காமலேயே தன் ஆன்மா மேல் உலகத்துக்குச் சொல்லும் என்பதை உபாசனை வழியில் உறுதி செய்கிறார். அப்படி என்றால், அந்தக் கல்லில் பூஜிக்கப்படும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரும் உமையம்மையைப் போற்றுபவர்கள். இதை ‘முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றுவர்’ (92) என்பதனால் அறியலாம்.

‘அந்த அன்பால் மீளு கைக்கு உன்தன் விழியின் கடை உண்டு’ (39) என்பதாலும் மேல் உலகத்துக்கு அழைத்துச் செல்லும், எமனை வழிமறித்து தடுத்ததையே “மறலி வருகின்ற நேர்வழி’’ என்கிறார். இந்த கருத்தையே உடன் பாட்டு நெறியில் ‘உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே’ (89) என்பதனாலும், ‘வளைக்கை அமைத்து அஞ்சல்’ (49) என்று ஆன்மாக்களுக்கு பிறவியை தடைசெய்யும் கங்கையை வணங்கு வதாலும் எமன் பிடித்துச் செல்வதற்கு எதிராக அவருடைய மேல் அதிகாரியான பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலானவர்களை வைத்து வழிபடும் கல்லைக் கொண்டு எமன் வரும் வழியை அடைக்கும் அந்த கல்லை வணங்க வேண்டிய அவசியம் உமையம்மையை வழிபடுவோர்க்கு அஃது இல்லை. இதையே “மறலி வருகின்ற நேர்வழி மறித்தேன்” என்கிறார்.

“அந்தமாக”
“குறித்தேன் மனத்தினில் நின் கோலம் எல்லாம்” என்று சாஸ்திர ரீதியில் சொல்லப்பட்ட தியானத்தையும், “நின் குறிப்பறிந்து” என்பதனால் உமையம்மையுடன் தானும் தன்னுடன் உமையம்மை பேசுவதையும், “மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி” என்பதனால் ஆன்மாவை மீண்டும் பிறவா வண்ணம் பிரம்மா விஷ்ணு ருத்ரர்களை தியானித்து எமன் வழியை தடுக்கும் கல்லையும்,“வண்டு கிண்டி வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை” என்பதனால் சக்திக்கு இடம் தந்த சிவபெருமானையும்,

“மெய்யில் பறித்தே குடிபுகுதும்” என்பதனால் உமையம்மை தவம் செய்து உடலில் பாதி பெற்ற வரலாற்றையும், “பஞ்ச பாணபயிரவியே” என்பதனால் மன்மதனின் ஐந்து மலர்களில் பூஜிக்கப் படும் பைரவி என்கின்ற தேவதையை வணங்குவதால் வாழ்வில் செல்வத்தையும் பிறவா முக்தியும், பெறலாம் என்கிறார் பட்டர். வழிபடுவோம். வளம் பெறுவோம்!

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post நின் குறிப்பறிந்து தெளிவாக நடப்பேன் appeared first on Dinakaran.

Related Stories: