குருவாயூர் கோவில் வளர்ப்பு யானை பத்மநாபனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலக்காடு : கேரளாவில் பிரசித்திப்பெற்ற குருவாயூர் கோவில் வளர்ப்பு யானை கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.குருவாயூர ஸ்ரீவல்சம் விருந்தினர் மாளிகை முன்பாக அமைந்துள்ள குருவாயூர் பத்மநாபனின் உருவச் சிலை முன் தேவஸ்தான சேர்மன் டாக்டர். வி.கே.விஜயன் குத்துவிளக்கேற்றி மலர்கள் தூவி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவஞ்சலியில் தேவஸ்தான நிர்வசாகக்குழு உறுப்பினர் மனோஜ், ரவீந்தரன் ஆகியோர் உட்பட தேவஸ்தான ஊழியர்கள், பாகன்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேவஸ்தான வளர்ப்பு யானைகளில் கோகுல் என்கிற யானை குருவாயூர் பத்மநாபனுக்கு துதிக்கை உயர்த்தி நினைவஞ்சலி செலுத்தி வணங்கியது. தொடர்ந்து கோபீகண்ணனும், தேவதாஸ், கஜேந்திரன், தேவி ஆகிய வளர்ப்பு யானைகள் நினைவஞ்சலி செலுத்தி வணக்கம் தெரிவித்தன. நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நகராட்சி வார்டு உறுப்பினர் உதயன், ஜீவதனம் துணை நிர்வாகி மாயாதேவி, துணை மேலாளர் மணிகண்டன், தேவஸ்தான ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.

குருவாயூர் பத்மநாபனின் நினைவஞ்சலி நாளில் அனைத்து வளர்ப்பு யானைகளுக்கு பழங்கள், சர்க்கரை, வெல்லம், அவில் மலர், கரும்பு, அண்ணாசிப்பழம், தர்பூசணி ஆகியவை தேவஸ்தான ஊழியர்களால் வழங்கப்பட்டது. 2020 ம் ஆண்டு பிப். 12 ம்தேதி குருவாயூர் பத்மநாபன் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுந்தோறும் குருவாயூர் பத்மநாபனுக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். குருவாயூர் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் குருவாயூர் கேசவன், குருவாயூர் பத்மநாபன் ஆகிய இரு யானைகளின் உருவச்சிலைக்கு முன் வந்தவாறு தரிசித்து, மொபைல் போனில் புகைப்படங்கள் மற்றும் ஷெல்பி எடுத்து செல்கின்றனர்.

The post குருவாயூர் கோவில் வளர்ப்பு யானை பத்மநாபனின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: