ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு இடைஞ்சல் இனிமே ஆர்எஸ்எஸ் ஸ்லோகம்தான் சொல்ல சொல்லுவாங்க…துரை வைகோ ‘பொளீர்’

திருச்சியில் நேற்று நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் படிக்காமல் புறக்கணித்தது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை. கூட்டம் தொடங்கும் போதே தேசிய கீதம் பாடவில்லை என கூறுவது முரண்பாடான விஷயம். சட்டசபை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கும், முடியும் போது தான் தேசிய கீதம் பாடப்படும்.

கடந்த முறை சட்டசபையில் தேசிய கீதம் வாசிக்கும் முன்பே ஆளுநர் மதிக்காமல் சென்றார். சென்ற முறை உரையில் காமராஜர், அண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர், கலைஞர் பெயரை தவிர்த்து விட்டு வாசித்தார். அவர் தான் மரபை மீறி நடந்து கொண்டார். தமிழ்நாடு அரசுக்கு இடைஞ்சல் கொடுப்பது தான் அவரின் வேலையாக இருக்கிறது. இனி வரக்கூடிய காலங்களில் ஆர்எஸ்எஸ் கொடி ஏற்றி ஆர்எஸ்எஸ் ஸ்லோகம் வாசிக்க சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை. ஒன்றிய அரசு, பாஜ அல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இணை அரசை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு இடைஞ்சல் இனிமே ஆர்எஸ்எஸ் ஸ்லோகம்தான் சொல்ல சொல்லுவாங்க…துரை வைகோ ‘பொளீர்’ appeared first on Dinakaran.

Related Stories: