பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (12.02.2024) நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று 12.02.2024 தலைமைச் செயலகத்தில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பிற துறைகளில் உள்ள நிலங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில், நில உரிமை மாற்றம் செய்வது குறித்தும், பயனாளிகளுக்கு விற்பனை பத்திரம் வழங்குவது, பட்டாக்கள் வழங்குவது மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளில் உள்ள நில உரிமை மற்றும் வாழ்விட உரிமை தொடர்பான பிரச்சனைகளை குறித்து எடுத்துரைத்தனர். இது குறித்து அமைச்சர் பெருமக்கள் தங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எடுத்துரைத்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீழ்கண்டவாறு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
* “சென்னை எனும் பழமையான நகரம். நமது பெருமைகளில் ஒன்றாக உள்ளது. உலகின் மிகச் சிறந்த நகரமாகவும் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து இன்று கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களுக்குமேல் வாழக்கூடிய ஒரு மிகப்பெரிய மாநகரமாக நம் சென்னை மாநகரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

* இதே வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை, இந்தக் கோட்டைதான். இப்போது நம் தலைமைச் செயலகமாக இயங்கி வருகின்றது. இங்கு அனைத்துத் துறைகளும் இயங்குவதற்குப் போதுமான இடம் இல்லாததால்தான், நாம் தற்போது இந்தக்கூட்டத்தைக்கூட நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகை’ முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் கூடுதலாகக்
கட்டப்பட்ட இடம்.

• இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் சென்னை நகரம் தேவைக்கேற்ப புதிய குடியிருப்புகளாலும் கட்டுமானங்களாலும் விரிவடைந்து வந்துகொண்டிருக்கிறது. மக்களுக்கு நில உரிமை தரப்பட வேண்டும். அவர்களுக்கு என்று சொந்த வீடு இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றுதான் நீதிக் கட்சிக் காலத்திலேயே பல திட்டங்கள் தீட்டப்பட்டன. இன்றைய தியாகராய நகர் என்பது நீதிக் கட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பகுதி. அதுதான் குடியிருப்புக்காக வடிவமைக்கப்பட்ட, சென்னையின் முதல் லே-அவுட் என்றுகூட சொல்லலாம்.

* அனைத்தையும் சமூக நீதி கண்கொண்டு பார்த்து ஆட்சி செய்த கலைஞர் அவர்கள் ஏழை. எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வந்ததுதான் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள்.

* சென்னை மக்கள் எவரும் குடிசையில் இருக்கக்கூடாது. அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்று கலைஞரின் முற்போக்குச் சிந்தனையால் குடிசை மாற்று வாரியம் மூலம் சென்னை நகரம் முழுவதும் பல குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் அங்கே குடியேற்றப்பட்டனர்.

* ‘குடிசைகள் இல்லாத மாநகரம்’ என்ற லட்சியத்துடன் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை அமைத்த கலைஞர், குடிசைகள் இல்லாத கிராமங்களை அமைக்க கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தையும் தொடங்கினார். இப்படி மக்களின் வாழ்விட உரிமையை உறுதிசெய்ய கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலம் முழுவதும் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்.

* பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் மொத்த உருவமாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் மக்களின் வசிப்பிடம் தொடர்பான பிரச்சினைகளைத் தொலைநோக்குப் பார்வையுடன் பல திட்டங்களையும் தீட்டி வருகின்றார்கள்.

* குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு என்பதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனப் பெயர் மாற்றி, மக்களுக்கு மேம்பட்ட வாழ்விடத்தை அமைத்துத் தர தொடர்ந்து புதிய திட்டங்களை அமைத்து வருகின்றார்.

* நம்முடைய அரசு அமைந்த பிறகு, ஏற்கெனவே வீடு கட்டிக் குடியிருக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் ‘இ-பட்டா’க்களை நாம் வழங்கி இருக்கின்றோம். இவை தவிர, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளிம்பு நிலை மக்களின் குடும்பங்களுக்கு, காலி மனைப் பட்டா வழங்கியுள்ளது நம்முடைய திராவிட மாடல் அரசு.

* நத்தம் நிலப் பட்டாக்கள் கணினியில் ஏறாமல் இருந்தன. 300 வருவாய் வட்டங்களில் இந்த நத்தம் பட்டா இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் பட்டாக்கள். இவற்றில் 121 வருவாய் வட்டங்களில் இணைய வழியில் பட்டா மாறுதலை நாம் செய்து முடித்துள்ளோம். மீதியுள்ள வருவாய் வட்டங்களில் உள்ள நத்தம் பட்டாக்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இணையத்தில் ஏற்றி முடிக்கப்படும். இப்படி நம்முடைய கழக அரசு மக்களுடைய வாழ்விட உரிமையை உறுதி செய்யத் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

* ஆனால் தொடர்ந்து வேகமாக நடைபெறும் குடியேற்றங்கள், நாம் முன்னெடுக்கும் திட்டங்களை அடுத்தடுத்து வருகின்ற அரசு, முறையாக எடுத்துச் செல்லாததால் சென்னையில் சில இடங்களில் பட்டா வாங்கும் நடைமுறையில் சில குழப்பங்கள் நிலவுகின்றன.

* வீட்டு வசதி வாரியத்திலிருந்து விற்பனைப் பத்திரம் பெற்றும் சிலருக்கு நில உரிமை மாறாமல், அரசின் பெயரிலேயே அந்த நிலம் இருப்பதாக, பட்டாவில் காட்டுகின்றது என்று பரவலாக ஒரு புகார் வந்து கொண்டிருக்கிறது.

* ஆலந்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர், மாதவரம் எனப் புறநகரங்கள் சென்னையுடன் இணைக்கப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு டவுன் செட்டில்மென்ட்’ எனப்படும் நகர நில அளவுத் திட்டம் நடந்து கொண்டுள்ளது.

* இதில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம்தான் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. மீதமுள்ள பட்டாக்கள் விரைவில் கொடுக்கப்பட வேண்டும் என்பததான் நம்முடைய அரசினுடைய நோக்கம்.

* எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களின் வாழ்விட உரிமையை உறுதி செய்திட வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

* இது போன்ற பட்டா பிரச்சினையால், சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 2 இலட்சம் குடும்பங்கள் நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றார்கள். இது வருவாய்த்துறை, வீட்டுவசதித் துறை, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாநகராட்சி, பொதுப் பணித்துறை, கால்நடைத் துறை எனப் பல துறைகள் தொடர்புடையதாக இருப்பதால், இதை ஒரு சிறப்புத் திட்டமாகக் கருதி சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரியுடன் கலந்து ஆலோசனை செய்து அறிக்கையாகத் தயார் செய்து தரும்படி முதலமைச்சர் அவர்கள் நம்மிடத்தில் அறிவுறுத்தினார்கள். அதன் பிறகுதான் இந்தக் கூட்டம் இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது.

* ஏற்கெனவே சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் உங்களின் தொகுதி சார்ந்த, பட்டா சார்ந்த கோரிக்கைகளை இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். இவை அனைத்தும் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறிக்கொள்கிறேன்.

* இந்த ஆலோசனைக் கூட்டம் நிச்சயம் 2 லட்சம் குடும்பங்களின் நீண்ட நாள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வைக்கப்படும் தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. முதலமைச்சரின் அறிவுரையைப் பெற்று இந்த 2 லட்சம் குடும்பங்களுக்கும் நில உரிமையும், வாழ்விட உரிமையும் உறுதி செய்யும் வகையில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளித்து,

* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, நில நிர்வாக ஆணையர் தலைமையில் ஒரு கமிட்டி சென்ற அக்டோபர் மாதத்தில் அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சிறப்புக் கவனம் செலுத்தி இந்தக் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கைகள் எடுக்க, வீட்டு வசதித்துறைச் செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையரை கேட்டுக்கொள்கின்றேன்.

* பட்டா தொடர்பாக மக்களுடைய கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கச் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் கேட்கும் தகவல்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நம் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் அவர்கள் இந்தப் பணி முன்னேற்றம் குறித்து, வாரம் ஒரு முறை ஆய்வு செய்து எனக்கு அறிக்கை வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

* இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பெருமக்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைக் கூறி விடைபெறுகிறேன்.

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள்/ அரசு முதன்மைச் செயலாளர்கள் / அரசு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: