சீல்டு கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கீடு அவசியம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிவகங்கை: பெரியாறு பாசன சீல்டு கால்வாய் கட்டுமானப் பணிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளன. பெரியாறு கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925ம் ஆண்டு சீல்டு மண் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி கண்மாயில் முடிவடைகிறது. எட்டு கி.மீ நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இக்கால்வாயில், கடந்த 2000ம் ஆண்டு ரூ.48லட்சத்தில் குறிச்சிப்பட்டி கண்மாய் காரமடை முதல் கண்மாய் கழுங்கு வரை சுமார் ஒரு கி.மீ தூரம் கண்மாயின் மேற்பகுதியில் பைபாஸ் கால்வாய் அமைக்கப்பட்டது.

இக்கால்வாயால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மழை நீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாவதால் சீல்டு மண் கால்வாயை, சிமென்ட் கால்வாயாக அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லாத நிலையில், இப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு சீல்டு கால்வாயை சிமென்ட் கால்வாயாக மாற்றியமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கால்வாய் அமைப்பதற்கான கணக்கீட்டு பணிகள் நடந்தது. இதன்முடிவில் ரூ.21.96 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை சார்பில் சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 2018ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், இத்திட்டத்திற்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு செய்வதாக 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மீண்டும் கடந்த 2022ம் ஆண்டு, ஜூனில் சீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் தமிழக அரசின் எதிர்வரும் பட்ஜெட்டில், இப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சீல்டு கால்வாய் பாசன சங்கத்தலைவர் சோழபுரம் மாரி கூறியதாவது: பெரியாறு கால்வாயில் நீர் திறந்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு எவ்வளவு பங்கு நீர் வழங்க வேண்டும் என்றும், சிமென்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் 2016ல் நீதிமன்றம் உத்தரவிட்டும், தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டும் வேறு எந்தப்பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ரூ.22 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. எனவே இந்த பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்க வேண்டும். இது குறித்து வேளாண்மைத்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

The post சீல்டு கால்வாய் பணிக்கு நிதி ஒதுக்கீடு அவசியம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: