குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயர் திருநிலை படுத்துதல் விழா: 22ம் தேதி நட்டாலத்தில் நடக்கிறது

மார்த்தாண்டம், பிப்.11 : குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயராக போப் அறிவித்த ஆல்பர்ட் அனஸ்தாஸ் நட்டாலத்தில் வரும் 22-ம் தேதி நடைபெறும் விழாவில் திருநிலைப்படுத்தப்படுகிறார். இது குறித்து ஆயர் திருநிலை படுத்துதல் விழாவின் ஊடக குழுவின் தலைவர் அருட்பணி டேவிட் மைக்கேல் நிருபர்களிடம் கூறியதாவது: 2020ம் வருடம் ஜூன் மாதம் குழித்துறை மறைமாவட்ட முந்தைய ஆயர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கடந்த மூன்றரை ஆண்டுகளாக மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அப்போஸ்தலிக்க பரிபாலகராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார்.கடந்த ஜனவரி 13ம் தேதி முனைவர் ஆல்பர்ட் அனஸ்தாஸ்சை திருத்தந்தை பிரான்சிஸ் குழித்துறை மறை மாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார். ஆல்பர்ட் அனஸ்தாஸ் ஆயர் திருநிலைப்பாட்டுச் சடங்கு மற்றும் பணிப்பொறுப்பேற்பு விழா வருகிற 22ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.00 மணிக்கு மறைசாட்சி தூய தேவசகாயம் பிறந்த நட்டாலம் திருத்தலத்தில் நடைபெறுகிறது. மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்கப் பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி விழாவிற்குத் தலைமையேற்று திருநிலைப்படுத்துகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் இந்தியத் தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி விழாவில் கலந்து கொண்டு முன்னிலை வகிக்கிறார். புதுவை-கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் மற்றும் கோட்டாறு முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் இணைந்து திருநிலைப்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். விழா திருப்பலியில் கோட்டாறு ஆயர் நசரேன் சூசை மறையுரை வழங்குகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பேராயர்கள், ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவிகள், துறவற சபைத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள், பல்சமய பெரியோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மறைமாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளைக் குழித்துறை மறைமாவட்டம் மேற்கொண்டு வருகிறது. அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் பிரதிநிதிகள் இணை ந்த பல்வேறு விழாக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவில் கலந்து கொள்வோருக்கு இருக்கை வசதிகள், வாகன நிறுத்த இட வசதி, விருந்தினருக்கான சிறப்பு ஏற்பாடுகள், அவசர மருத்துவ உதவி, உணவு, குடிநீர், பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மாண்டமாக திருப்பலி மேடை அமைக்கப்பட்டு ஆயிரம் அருள்பணியாளர்கள் திருப்பலி நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவழிபாடு மற்றும் திருப்பலி பாடல்கள் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஊடக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அருட்பணி டோமிலின் ராஜா, பிடிஎஸ் மணி, டாக்டர் ரைமண்ட் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

மணவிளை கிராமத்தில் பிறந்தவர்
ஆல்பர்ட் அனஸ்தாஸ் குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள மணவிளை கிராமத்தில் 1966 ம் ஆண்டு ஜுன் 10ம் தேதி அனஸ்தாஸ் , ரோணிக்காள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
 தொடக்கக் குருத்துவப் பயிற்சியை நாகர்கோவில் தூய ஞானப்பிரகாசியார் இளங்குருத்துவக் கல்லூரியிலும், மெய்யியல் படிப்பை மதுரை கருமாத்தூர் கிறைஸ்ட் ஹால் கல்லூரியிலும், இறையியல் படிப்பை திருச்சி தூய பவுல் குருத்துவக் கல்லூரியிலும் பயின்று 1992ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி கோட்டாறு மறை மாவட்டத்திற்காக அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.
 குழித்துறை மறை மாவட்டத்தின் வட்டார தலைமையகமான முளகுமூடு தூய மரியன்னை பங்கில் தன் பணி வாழ்வை உதவி பங்குத்தந்தையாக தொடங்கிய அவர் கேசவன் புத்தன்துறை, இராஜாவூர், புன்னைநகர் உள்ளிட்ட பங்குகளில் பங்குத்தந்தையாகவும் கோட்டாறு மறைவட்ட முதன்மை அருள்பணியாளராகவும், கிராம மேம்பாட்டுத் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார்.
 நாகர்கோவில் தூய ஞானப்பிரகாசியார் இளங்குருத்துவக் கல்லூரி, மதுரை கிறைஸ்ட் ஹால் கல்லூரி மற்றும் திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி ஆகிய தான் பயின்ற அனைத்துக் குருத்துவ கல்லூரிகளிலும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தார்.

சமூக சேவை நிறுவனங்கள்
 குழித்துறை மறைமாவட்டம் கோட்டாற்றில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ்சால் 2014 டிசம்பர் 22ம் தேதி புதிய மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
 புதிய மறைமாவட்ட தொடக்க விழாவும், முதல் ஆயரின் திருநிலைப்பாட்டு விழாவும் 2015ம் ஆண்டு பிப்ரவரி 24ம் நாள் சித்திரங்கோடு டிரினிட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 சுமார் 4 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களைக் கொண்டு 6 மறை வட்டங்களோடு இயங்கி வரும் குழித்துறை மறை மாவட்டம் இரண்டு கலைக்கல்லூரிகள், ஒரு பொறியியல் கல்லூரி, 32 தொடக்கப் பள்ளிகள், 10 நடுநிலைப் பள்ளிகள், 11 உயர் நிலைப் பள்ளிகள், 10 மேல் நிலைப் பள்ளிகள், தொழில்நுட்பக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, 10க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட ஆங்கிலப் பள்ளிகள், சமூக சேவை நிறுவனங்கள், நாஞ்சில் பால் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு குழித்துறை மறைமாவட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது.

The post குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயர் திருநிலை படுத்துதல் விழா: 22ம் தேதி நட்டாலத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: