தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தீவிரம்; குமரியில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்படை: துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு

நாகர்கோவில், பிப்.11 : நாடாளுமன்ற தேர்தல் காரணமாக லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் காவல் நிலையங்களில் அதை ஒப்படைக்க வேண்டும் என எஸ்.பி. கூறினார். மேலும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது, சென்னை வந்தார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு மற்றும் உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமும் ஆலோசித்தனர். தேர்தல் முன்னேற்பாடுகளாக ஏற்கனவே போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தர் தலைமையில் நடந்து வருகிறது. எஸ்.பி. சுந்தரவதனம் தலைமையில் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வு நடந்து வருகிறது. முதற்கட்டமாக ரவுடிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. ஏற்கனவே காவல் நிலையம் வாரியாக பழைய ரவுடிகள் பட்டியல் உள்ளது. ஏற்கனவே இந்த ரவுடிகள் பட்டியல் ஏ, பி, சி என தரம் பிரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆக்டிவ் ரவுடிகள் ஏ பிரிவு பட்டியலில் உள்ளனர். இவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். இது போன்ற ரவுடிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் பிரிவு 110, 109 ன் கீழ் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்படுகிறது. மேலும் பதற்றமான வாக்கு சாவடிகள் கணக்கெடுப்பிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து எஸ்.பி. சுந்தரவதனம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளிடம் நன்னடத்தை சான்றிதழ் எழுதி வாங்கப்படுகிறது. இதை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அந்த துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 350 பேர் லைசென்ஸ் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இதில் பண பயன்பாடுகள் தவிர மற்ற காரணங்களுக்காக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தீவிரம்; குமரியில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்படை: துப்பாக்கிகளை ஒப்படைக்க எஸ்.பி. உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: