பள்ளிப்பட்டில் ரூ5.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு


* உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர்
* கலெக்டர், அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் ₹5.76 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்ற கட்டிடத்தை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வேல்முருகன், முகமது ஷாபீக் ஆகியோர் திறந்து வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த 23 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ₹5.76 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் குளிர்சாதன வசதியுடன் நடுவர் அறை, நீதிமன்ற வளாகம், வங்கி சேவை, தபால் சேவை, சட்ட ஆலோசனை மையம், காவலர்கள் ஓய்வு அறை உட்பட அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி ஆகியோர் வரவேற்று பேசினர். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பி.வேல்முருகன், முகமது ஷாபீக் ஆகியோர் நீதிமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில் நீதியரசர் பி.வேல்முருகன் பேசுகையில், சாதாரண மக்களுக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில், சட்டத்திற்கு உட்பட்டு நீதியை கொண்டு செல்வது நமது கடமையாக நீதியரசர்கள், வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் தற்போது 67 நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இங்கு வருவதாகவும், 39 கட்டிடங்கள் நீதித்துறைக்கு தொடர்பு இல்லாத அரசுத்துறை கட்டிடங்களில் இயங்கி வருவதால், தமிழக அரசு நீதிமன்றங்களுக்கு இடத்தை தேர்வு செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 4 நீதிமன்றங்களுக்கு புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு இடத்தை தேர்வு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், பள்ளிப்பட்டு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தரணிதரன், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் கோபால், செயலாளர் வேலு, அரசு வழக்கறிஞர் ரகு, முன்னாள் அரசு வழக்கறிஞர் மாவட்ட நோட்டரி பப்ளிக் வி.பி.டில்லி, மூத்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியம், வழக்கறிஞர்கள் அன்பழகன், விஜயன், பரத்குமார், செல்வம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் வேல்ராஜ் நன்றி கூறினார்.

பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அடிக்கல்
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டி ஊராட்சியில், ₹49.23 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது ஷாபீக், திருவள்ளூர் மாவட்ட நீதிபதி செல்வ சுந்தரி, பொன்னேரி நீதிபதி கிருஷ்ணசாமி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளிப்பட்டில் ரூ5.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: