தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கூடலூர் : தை அமாவாசையை முன்னனிட்டு சுருளிக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அருவியில் புனிதநீராடி, கோயிலில் வழிபட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இங்கு பூதநாராயணன் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில், சுருளிவேலப்பர் கோவில், சுருளிமலை ஸ்ரீ ஐயப்பசாமி கோவில் மற்றும் கைலாய நாதர் குகை கோயிலும் உள்ளன. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்.

இது சுற்றுலா தலமாகவும், தமிழகத்தின் புண்ணியதலமாகவும் விளங்குகிறது. சுருளி நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும். இங்கு சித்திரை, தை பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் சுருளிக்கு வந்தனர்.
அருவியில் குளித்த பின்னர் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வழிபாடுகள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து, அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர்.

சுருளி ஆதி அண்ணாமலையார் கோவிலில் மக்கள் நோய்நொடியின்றி நலமுடன் வாழ, பூஜாரி முருகன் தலைமையில் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையாருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பதினெட்டு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. கோயில் அன்னதான மடத்தில் காலை முதல் அன்னதானம் நடைபெற்றது. அண்ணாமலையார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுருளி வரும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பம் கிளை 2, தேவாரம், லோயர்கேம்ப் பணிமனைகளிலிருந்து 21 சிறப்பு பஸ்கள் 5 நிமிட இடைவெளிதோறும் சுருளி அருவிக்கு இயக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி உத்தரவில் கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழங்கு போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தை அமாவாசையை முன்னிட்டு நேற்று சுருளி அருவிக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறை நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை.அருவி பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகள் பயன்படுத்துவதற்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

ஆனால் சுருளி அருவி நுழைவாயில் பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. வனத்துறையின் தடை குறித்து தெரியாமல் சோப்பு, ஷாம்பு வாங்கிச்செல்லும் சுற்றுலாப்பயணிகளிடம் அருவிப்பகுதியில் வனத்துறை பணியாளர்கள் அதை பறிமுதல் செய்கின்றனர். எனவே சுருளி அருவியில் கடைகளில் சோப்பு, ஷாம்பு விற்பதை தடை செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: