சென்னை அருங்காட்சியகத்திற்கு புலிக்குத்தி நடுகல்லை கொண்டு செல்ல எதிர்ப்பு: கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

 

வத்திராயிருப்பு, பிப். 10: வத்திராயிருப்பு தாலுகா சுரைக்காய்பட்டி புலிக்குத்தி அய்யனார் கோயிலில் உள்ள நடுகல்லை சென்னை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு தாலுகா சுரைக்காய்ப்பட்டி ஊருக்கு மேற்கே தொல்லியல் சிறப்பு மிக்கதாக இருக்கும் புலிக்குத்தி அய்யனார் கோயிலை பாதுகாக்கவும், அங்கு உள்ள நடுகல்லை சென்னை அருங்காட்சியகத்தில் கொண்டு வைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கு சுரைக்காய் பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக சமாதான கூட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள், அருங்காட்சியக அதிகாரிகள், கிராம பொதுமக்கள், நடுகல்லை குலதெய்வமாகக் கும்பிடுபவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது புலிக்குத்தி அய்யனார் கோயிலை தங்களின் சொந்தப் பொறுப்பில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாகவும், புலிக்குத்தி நடுகல்லுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து கொள்வதாகவும், அதனால் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
அதைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

The post சென்னை அருங்காட்சியகத்திற்கு புலிக்குத்தி நடுகல்லை கொண்டு செல்ல எதிர்ப்பு: கிராம மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: