காஞ்சிபுரத்தில் காவலர் உடற்தகுதி தேர்வில் 255 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம், பிப்.9: காஞ்சிபுரத்தில் காவலர் உடற் தகுதி தேர்வில், 255 பேர் பங்கேற்றனர். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறை காவலர், கிரேடு 2 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களை தேர்வு செய்ய நடைபெற்ற எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. காஞ்சிபுரம் சரகத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் தேர்வான 400 பேருக்கு நேற்றைய உடல் தகுதி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில், 86 பேர் பங்கேற்காததால் 314 தேர்வர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பிப்.6ம் தேதி தொடங்கி பிப்.9ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் அடிப்படையில், முதல் நாளான பிப்.6ம் தேதி 400 தேர்வர்கள் அழைக்கப்பட்டு, வருகைதந்த 314 பேருக்கு கல்வி சான்றிதழ் சரிபார்ப்பு, எடை, உயரம் மற்றும் மார்பளவு கணக்கிடும் தேர்வு நடைபெற்றது. இதில், 256 பேர் உடற்தகுதி தேர்வில் தேர்வாகினர். 58 பேர் தகுதி இழந்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100மீ, 400மீ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல்கட்ட தேர்வில் தகுதி பெற்ற 256 பேரில் 255 பேர் கலந்து கொண்டனர்.

தேர்வு பணியை ஒட்டி அப்பகுதி முழுவதும் காவல் துறை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வர்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் என தேர்வர்கள் கருதினால் அங்குள்ள அதிகாரியிடம் முறையிட்டால் மீண்டும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தேர்வு பணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் காவலர் உடற்தகுதி தேர்வில் 255 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: