வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற விவகாரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ தீவிர விசாரணை: 8 செல்போன், 30 ஆவணங்கள்  நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 2022 மே மாதம் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பிடிபட்டனர். விசாரணை அடிப்படையில் வழக்கு ஓமலூர் காவல் நிலையத்தில் இருந்து என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் என்ஐஏ அதிகாரிகள் பிடிபட்ட சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தியதில், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்றது தெரியவந்தது.

மேலும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாக இருவரும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர். அதன்படி என்ஐஏ அதிகாரிகள் தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட கோவையை சேர்ந்த கபிலன் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து கடந்த 2ம் தேதி என்ஐஏ அதிகாரிகள் நாதக நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், தென்னக விஷ்ணு பிரதாப், பாலாஜி, ரஞ்சித்குமார் ஆகியோர்களுக்கு சொந்தமான வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

அதைதொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆஜராகி 8 மணி நேரத்திற்கும் மேல் விளக்கம் அளித்தனர். அவர்கள் அளித்த பதிலை என்ஐஏ அதிகாரிகள் வாக்கு மூலமாக பதிவு செய்தனர். இதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 8 செல்போன்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆவணங்களை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இந்நிலையில, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் மற்றும் தென்னக விஷ்ணு ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் வெளிநாட்டில் விடுதலைப்புலி அமைப்பிடம் இருந்து பெற்ற நிதி, சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி மற்றும் கபிலன் ஆகியோர் இடையே உள்ள தொடர்புகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இடும்பாவனம் கார்த்திக், தென்னக விஷ்ணு அளித்த பதிலை என்ஐஏ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* குறும்பட இயக்குநர்வீட்டில் என்ஐஏ சோதனை
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் முகில் சந்திரா(40). குறும்பட இயக்குநரான இவர், சில ஆண்டுகளாக சென்னை கொரட்டூர் கெனால் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் பிடிபட்ட மாவோயிஸ்டுகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா பல முறை அவர்களிடம் பேசியது தெரியவந்தது. மேலும், மாவோயிஸ்டுகளை வைத்து குறும் படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 6 இடங்களில் ஐதராபாத்தை தலைமையிடாக கொண்டு இயங்கும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று மூத்த பத்திரிகையாளர் வேணுகோபால் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக சென்னை கொரட்டூரில் உள்ள குறும் பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டிற்கு நேற்று காலை 8 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும், முகில் சந்திரா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற விவகாரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ தீவிர விசாரணை: 8 செல்போன், 30 ஆவணங்கள்  நீதிமன்றத்தில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: