பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே.. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை : தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி

சென்னை : சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததுள்ளது. சென்னையல் சாந்தோம், அண்ணா நகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்ட தகவல்படி, போலீசார்மோப்ப நாயுடன் மேற்கண்ட பள்ளிகளுக்கு விரைந்தனர். பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தியபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் , சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,”சென்னையில் 13 பள்ளிகளுக்கு ஒரே மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து சோதனை நடத்தப்பட்டது; சந்தேகப்படும் படியான பொருட்கள் ஏதும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம்.வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகிறது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் மின்னஞ்சல் முகவரியில் வந்த விவரங்களை தெரிவிக்க இயலாது. காலை 10 மணி முதல் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. புரளியை கிளப்புவதற்காக அனுப்பப்பட்ட மிரட்டலாகவே தெரிகிறது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே.. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை : தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: