மக்களவையில் ப.சிதம்பரம் விளாசல் இடைக்கால பட்ஜெட்டில் வெறும் பேச்சு தான் இருக்கு

புதுடெல்லி:இடைக்கால பட்ஜெட்டில் வெறும் பேச்சு மட்டும்தான், செயலில் எதுவும் இல்லை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.மக்களவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் விவாதத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

அனைவரையும் உள்ளிடக்கிய, அனைவருக்குமான வளர்ச்சி என 2014ல் வெற்று வாக்குறுதியுடன் ஆட்சியை பிடித்த பாஜ அரசு கடந்த 10 ஆண்டில் மக்களுக்கு துரோகம் செய்கிறது. இந்த 10 ஆண்டில் அரசின் தவறான நிர்வாகத்தால் மக்கள் பல துயரங்கள், கஷ்டங்கள், குறைந்த வருமானம் மற்றும் அதிக வேலையின்மை பிரச்னைகளை சந்திக்கின்றனர். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினரும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலையின்மை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. வேலையின்மையுடன் சேர்ந்து பணக்காரர், ஏழை இடையேயான வித்தியாசம் விரிவடைந்து பேரழிவாக மாறும் நிலையில் உள்ளது.

கடந்த 10 ஆண்டில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதற்கு எந்த புள்ளிவிவரத்தையும் காட்டவில்லை. 2022-23ம் நிதியாண்டில் பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தில் 689 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். ஆனால், 7.8 லட்சம் பேர் மட்டுமே கிளைம்களை பெற்றுள்ளனர். கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் எண்ணிக்கை 2019ல் 11.84 கோடியிலிருந்து 2022ல் 3.78 கோடியாக சரிந்துள்ளது. இது 67 சதவீத சரிவை காட்டுகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கியிருக்கும் நிதி அமைச்சர், பட்ஜெட்டில் அறிவியல் பூர்வமாக எதுவும் இல்லை, வெறும் அதிர்ஷ்ட எண்களிலேயே பொருளாதாரம் நடத்தப்படுகிறது என்பதை காண்பித்துள்ளார்.எனவே, பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகளுக்கும், சாமானியர்களை பாதிக்கும் நெருக்கடிகளுக்கும் எந்த தீர்வும் இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டில் உண்மையை தேவையானதை செய்யாமல், பார்க்க பளபளப்பாக தோன்றும் மாய விளையாட்டைதான் அரசு விளையாடி இருக்கிறது. வெறும் பேச்சு தான் இருக்கிறது. செயலில் ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களவையில் ப.சிதம்பரம் விளாசல் இடைக்கால பட்ஜெட்டில் வெறும் பேச்சு தான் இருக்கு appeared first on Dinakaran.

Related Stories: