மக்களவை தேர்தல் குறித்து பல்வேறு துறை உயர்அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை..!!

சென்னை: மக்களவை தேர்தல் குறித்து பல்வேறு துறை உயர்அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், மாநில வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர்.

தேர்தல் ஆணைய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ, முதன்மை செயலர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். காவல்துறை, வருமானவரித்துறை, தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், பல்வேறு துறை உயர்அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்கள் மற்றும் தேர்தலுக்கான ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமித்து வைக்கப்படும் இடங்கள், பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் சத்யபிரத சாஹு உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை முடிந்த பிறகு இன்று மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைவரும் டெல்லி புறப்படவுள்ளனர்.

தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கங்களை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகையை முன்னிட்டு தமிழ்நாட்டு காவல்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவை தேர்தல் குறித்து பல்வேறு துறை உயர்அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-வது நாளாக ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: