திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடைகள் பயன்பாட்டிற்கு வந்தது: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் இரண்டு நியாய விலை கடைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் திருவல்லிக்கேணி மற்றும் ஜானி பாட்சா தெருவில் இயங்கி வந்த நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன. இதனையடுத்து இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கட்டிடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கடைகளை திறந்து வைத்தார். இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தயாநிதி மாறன் எம்பி., நிலைக் குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் மதன்மோகன் உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த நியாயவிலை கடைகளின் மூலம் வின்.என்.தாஸ் தெரு, மோகன் தாஸ் தெரு, களிமண்புரம், செல்ல பிள்ளையார் கோயில் தெரு, நைனியப்பன் தெரு, பார்டர் தோட்டம், பாரதி சாலை, பைகிராட்ப்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2385 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். அதேபோல், இந்த பகுதி மக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகாமையிலேயே அத்தியாவசிய பொருட்களை பெறலாம்.

The post திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் நியாய விலை கடைகள் பயன்பாட்டிற்கு வந்தது: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: