ஆன்மிகம் பிட்ஸ்: கேது பகவானுக்கு தனி ஆலயம்

ஆவுடையாரின்றி லிங்கம்

உசிலம்பட்டி புத்தூரிலுள்ள வேலாயுதர் திருக்கோயிலில் தாணுமாலய லிங்கம் உள்ளது. இங்கு பீடம் (ஆவுடையார்) இல்லாமல் பாணம் மட்டுமே உள்ளது. சிவன், பிரம்மா, திருமால், மூவரும் அடக்கம் என ஐதீகம்.

மும்முக லிங்கம்

திருவக்கரையில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் திருக்கோயிலில் மூலவர் மும்முக லிங்கமாகக் காட்சித் தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சியாகும்.

லிங்கமூர்த்தி எழுப்பும் மணியோசை

நவபாஷாணத்திற்கு இணையான சூரிய காந்தத்தன்மை கொண்ட ஒரே கல்லினால் 55 அடி உயரத்தில் வடிக்கப்பட்ட லிங்கம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தென்பொன் பரப்பியில் உள்ளது. இந்த லிங்கத்திற்கு சொர்ணபுரீஸ்வரர் என்று பெயர். லிங்கம் பதினாறு பட்டைகளாகச் செதுக்கப்பட்டு பிரம்மா மற்றும் விஷ்ணு பீடத்திற்கு மேல் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தைத் தட்டிப் பார்த்தால் வெங்கல மணியோசை கேட்கிறது.

ராமலிங்கங்கள்

ராவணனை அழித்த ராமனுக்கு பிரம்மஹத்தி, வீரஹத்தி, சாயாஹத்தி எனப்படும் மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. இவை நீங்க ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார், ராமன். இந்த மூன்று தலங்களிலும் உள்ள சிவலிங்கங்கள் ‘ராமலிங்கம்’ என்ற பெயரிலேயே திகழ்கின்றன.

ஐஸ்வரியம் தரும் வழிபாடு

கோவாவில் ஜம்பாவளி என்ற பகுதியில் தாமோதர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சொர்ணலிங்கம் ஒன்று இருக்கிறது. அந்த லிங்கத்தை வழிபாடு செய்ய தினமும் 51 மலர்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஐந்து ஐந்தாக பத்து வரிசைகளிலும் ஒரு மலர் மட்டும் கீழுமாக சொர்ணலிங்கத்திற்கு சாத்தி அலங்காரம் செய்யப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

கேது பகவானுக்கு தனி ஆலயம்

நவகிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்குத் தனி ஆலயம், திருமுருகன் பூண்டியில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சம் குருக்கத்தி மரம். இங்குள்ள இறைவனைக் குறித்து சுந்தரர் பத்து பதிகங்கள் பாடியுள்ளார். முருகப் பெருமான் இத்தலத்திற்கு வந்து மானசீகமாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டு தன் பிரமோஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார்.

அரக்கர் கட்டிய அரன் ஆலயம்

ஈரோட்டிலுள்ள இன்னொரு ஆலயம், மகிமாலீஸ்ரர் கோயில். ராவணனின் மூதாதையர்களான மகிமாலி, கமாலி இருவராலும் நிறுவப்பட்ட் கருவறையில் சிவலிங்கத்தின் ஆவுடையார் 6 அடி விட்டம் உடையதாகவும் லிங்கம் 3 அடி உயரமுள்ளதாகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

ஜடாமுடி தரித்த சிவலிங்கம்

அபூர்வமாக சில தலங்களில் மட்டுமே ஜடாமுடி தரித்த சிவலிங்கத்தை தரிசிக்க இயலும். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில், அந்த ஜடாமுடியை தரிசிக்கக்கூடாது என்ற ஐதீகம் காரணமாகவே மூலவர் கருவறையை முழுவதுமாக பக்தர்கள் வலம் வருவதில்லை. காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் தாண்டி ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ள திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது ஒரு சிறு முண்டு இருப்பதைக் காணலாம்.

ஈசன் ஜடாபாரத்தோடு இருக்கிறான் என்று இதனை வர்ணிக்கிறார்கள். ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தை திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகிலுள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோயிலிலும் காணமுடிகிறது. சிவலிங்கத்தின் பின்னால் உள்ள ஜடாமுடியை, கருவறை வலம் வரும்போது பின்புறச் சுவரிலுள்ள துவாரம் வழியாகத் தரிசிக்கலாம்.

பூலோகம் வந்த பாதாள நாகக் கன்னியர்

பாதாள லோகத்தில் வாசம் செய்த நாகக் கன்னிகைகள் பூலோகம் சென்றுவர. நாகராஜனிடம் அனுமதி கேட்டனர். சூரியன் மறைவதற்குள் திரும்ப வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் பூலோகத்திற்கு வந்தனர். வெள்ளியங்கிரி மலையடிவாரத்தின் அழகில் மனதை பறிகொடுத்த அவர்கள் சூரியன் மறைவதை கவனிக்கவில்லை. வாக்கு தவறியதால் பாதாளலோகத்திற்கு திரும்ப முடியவில்லை. நாகராஜனின் சாபத்திற்கு ஆளானார்கள்.

அங்கிருந்த நதிக்கரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்தனர். சில நாட்களில் சிவபெருமான் அவர்களுக்கு காட்சியளித்து சாபவிமோசனம் அருளினார். அதற்கு பின்னரே நாகக் கன்னிகைகள் தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றனர். இந்த அற்புத சம்பவம் நிகழ்ந்த நாகேஸ்வரன் திருக்கோயில், கோவைபூண்டி சாலையில் கோட்டைக்காடு என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.

தொகுப்பு: நாகலட்சுமி

The post ஆன்மிகம் பிட்ஸ்: கேது பகவானுக்கு தனி ஆலயம் appeared first on Dinakaran.

Related Stories: