மார்க்கெட் கமிட்டியில் குவியும் நெல் மூட்டைகள் செஞ்சியில் விவசாயிகள் சாலை மறியல்

* போலீசார் சமரச பேச்சுவார்த்தை

* கூடுதல் இடம் ஒதுக்க கோரிக்கை

செஞ்சி : செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கடந்த 20 நாட்களாக தினமும் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நெல் மூட்டைகள் கொண்டு வரும் வாகனங்களை உள்ளே அனுமதித்து இறக்கி வைக்கப்பட்டு மறுநாள் காலை ஏலம் எடுக்க லாட் வழங்குவது வழக்கம். தினமும் 10 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருந்தது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் பேசி டோக்கன் முறையில் விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யலாம் என அறிவித்திருந்தது. ஆனால், இதனை பொருட்படுத்தாமல் டோக்கன் வாங்கியவர்களும், டோக்கன் வாங்காதவர்களும் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் குவிந்து நேற்று காலை முதல் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சுமார் ரூ.8 கோடிக்கு விற்பனை செய்த நெல் மூட்டைகளை படிப்படியாக தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்து வருகின்றனர். மேலும் மார்க்கெட் கமிட்டியில் போதிய இடவசதி இல்லாததால் கமிட்டியின் கேட்டை பூட்டி, தொடர்ந்து நெல் மூட்டைகளை ஏற்றி வாகனங்களை வெளியிலேயே நிறுத்தி வருகின்றனர். இதனை அறியாத விவசாயிகள் நேற்று மார்க்கெட் கமிட்டிக்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த நிலையில் உள்ளே அனுமதிக்காததை கண்டித்து சாலையோரமாக டிராக்டர்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கமிட்டியில் நெல் மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தற்போது நெல் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை அனுப்பி வைத்து தீர்வு கண்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு தினமும் வரும் நெல் மூட்டைகளை ஏலம் எடுத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும். மேலும் இங்கு போதிய இடவசதி இல்லாததால் வேறு இடத்தில் நெல் மூட்டைகளை இறக்கி வைத்து ஒரு நாள் ஏலம் கமிட்டியிலும், மறுநாள் ஏலம் வேறு இடத்திலும் நடைபெறுவதற்கும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும் அமைச்சர் மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மார்க்கெட் கமிட்டியில் குவியும் நெல் மூட்டைகள் செஞ்சியில் விவசாயிகள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: