நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ மகளிரணி மாநாடு -ஒன்றிய இணை அமைச்சர் பங்கேற்பு

ஊட்டி : நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ மகளிரணி மாநாடு ஊட்டியில் உள்ள ஒய்பிஏ அரங்கில் நேற்று நடந்தது. இதில் நீலகிரி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஏராளமான பாஜ மகளிரணியினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டது.

ஒவ்வொரு தொகுதியிலும் மகளிரணி, விவசாய அணி, இளைஞரணி, பட்டியலணி என ஒவ்வொரு அணி சார்பிலும் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மகளிரணி மாநாடு இன்று ஊட்டியில் நடத்தப்பட்டது. சமீபகாலமாக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள் அதிகளவு உற்சாகத்துடன் வாக்களித்தனர்.

பாஜவும் பிரதமர் மோடியும் எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதில் மகளிருக்கு எந்த மாற்றத்தை தர முடியும் என சிந்திக்கிறது. அந்த வகையில் 10 கோடி பெண்களுக்கு மேலாக இலவச கேஸ் சிலிண்டர் திட்டம், இலவச கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் பெண்கள் பெயரில் 20 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் பெண்களை தொழில்முனைவோராக மாற்ற வங்கிகள் மூலமாக முத்ரா கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோன்ற திட்டங்கள் பெண்களை சமூக ரீதியாக உயர்த்த உதவியாக உள்ளது. தமிழகத்தில் பெண்கள் மத்தியில் பாஜவிற்கும், மோடிக்கும் நல்ல ஆதரவு உள்ளது. பாஜ மகளிரணி நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கடுமையாக உழைக்கின்றனர். இணை அமைச்சர் முருகன், நீலகிரியில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி வருகிறார்’’ என்றார்.

தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் முருகன் கூறியதாவது: ஊட்டியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ முழு வீச்சில் தேர்தல் பணியை துவங்கியுள்ளது.
பூத் கமிட்டி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி நீலகிரி தொகுதிக்குட்பட்ட 1618 பூத்களிலும் ஒலிபரப்பப்பட்டது. ஒவ்வொரு பூத் பகுதியிலும் தாமரை வரையப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. பாஜ மக்கள் விரும்பும் கட்சியாகவும், மக்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சியாகவும் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

The post நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ மகளிரணி மாநாடு -ஒன்றிய இணை அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: