மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு

திண்டுக்கல், பிப். 4: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அம்ரித் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்வது குறித்து நேற்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்வா, எம்பி வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, முதன்மை கோட்ட பொறியாளர் சந்தீப் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கோட்ட மேலாளர், திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் நடை மேடைகளை பார்வையிட்டு, நவீனப்படுத்த என்னென்ன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ஸ்டேஷன் அதிகாரிகளிடம் கேட்டார். தொடர்ந்து அம்ரித் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்வது தொடர்பான வரைபடத்தை பார்வையிட்டு ஆலோசனை செய்தார். பின்னர் கோட்ட மேலாளர் கூறியதாவது: அம்ரூத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் விரைவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து நடைமேடைகள் முழுவதும் மேற்கூரைகள் அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் வாகன நிறுத்தம், அதிக இட வசதியுடன் லிப்ட் மற்றும் 2வது, 3வது நடைமேடையில் குளிர்சாதன வசதி, சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். இந்த ஆய்வின் போது ஸ்டேஷன் மேனேஜர் கோவிந்தராஜ், தலைமை வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பகுதி பொறியாளர்கள் செந்தில், சண்முகவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: