இளம்பெண் கொன்று எரிப்பு: காதலன் வெறிச்செயல்


வாழப்பாடி: வாழப்பாடி அருகே இளம்பெண் கொன்று எரிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தகாத உறவு காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (28). இவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள தேக்கல்பட்டி ஊராட்சி மலையாளப்பட்டி பகுதியில் கருமாவரத்தான் காடு என்னுமிடத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு வசித்து வருகிறார். அவருடன் இளம்பெண் ஒருவரும் தங்கியிருந்தார். அப்பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளனர். இதையடுத்து, பக்கத்து தோட்டத்தில் வசித்து வருபவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது, தோட்டத்தில் ஒரு மூலையில் விறகு கட்டைகளை வைத்து அதில் இளம்பெண் உடல் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், போலீசார் விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலத்தை மீட்டனர். விசாரணையில், அவர் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சுகுணா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுகுணாவிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். வல்லரசுவுடன் தகாத உறவு ஏற்பட்டதால், கணவனை விட்டு பிரிந்து 2 குழந்தைகளுடன் வந்து வல்லரசுவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் சுகுணாவை அடித்துக் கொலை செய்த வல்லரசு, தடயத்தை மறைப்பதற்காக சடலத்தை தீயிட்டு கொளுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து தலைமறைவான வல்லரசுவை தேடி வருகின்றனர். அவர், சிக்கினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post இளம்பெண் கொன்று எரிப்பு: காதலன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: