அனைத்து தெய்வங்களையும் ஆட்கொண்டருளும் ஆப்புடையார்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

புகழ் பெற்ற மதுரை மாட்டுத் தாவணியில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாதையில் எழிலுற அமைந்துள்ளது. ‘மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோயில்’. இறைவன் திருவாப்புடையார், இறைவி சுகந்த குந்தளாம்பிகை. இங்கு இறைவன் சிவலிங்கத் திருமேனியில் எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கியவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சோழாந்தக மன்னனின் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்து விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். மக்கள் போற்றும் வண்ணம் மன்னன் நல்லாட்சி புரிந்தான். சிவபக்தியில் சிறந்தவனாக விளங்கிய சோழாந்தக மன்னன் சிவபூஜை செய்த பின்னர்தான் எப்போதும் உணவருந்தும் வழக்கம் உள்ளவன். ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது அழகிய ஒரு மானை விரட்டினான்.

அது இவனது பிடியில் அகப்படாமல் விரைந்தோடியது. மறைந்தது, மானை விரட்டிய களைப்பில், அடர்ந்த காட்டின் நடுப்பகுதியில் தடுமாறி கீழே விழுந்து விட்டான். உடன் வந்த பாதுகாப்பு வீரர்கள் மன்னரின் களைப்பு தீர சிறிது உணவருந்துமாறு கூறினர். ‘சிவபூஜை செய்யாமல் சாப்பிட மாட்டேன்’ என்று மன்னன் உறுதியாகத் தெரிவித்தான். நடுக்காட்டில் சிவபூஜை எப்படிச் செய்வது? உடன் வந்த அமைச்சர் சற்று யோசித்த பின்னர், அங்கே இடந்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக் காட்டி, ‘‘அரசே! இந்த அடர்ந்த கானகத்தில் சிவபூஜை செய்ய எந்த வழியும் இருப்பதாகக் காணோம்.

இந்த மரத்துண்டையே சுயம்புலிங்கமாகக் கருதி அதற்கு சிவபூஜை செய்த பின்னர், சிறிது உணவருந்தலாமே!’’ என்று யோசனை கூறினார். அதுலிங்கம் அல்ல ஆப்பு என்பதையறிந்த மன்னன் மனம் மிக வருந்தி, ‘‘இறைவா! நான் இது நாள் வரை உன்னைப் பூஜித்தது உண்மையானால் நீ இந்த ஆப்பில் வந்து அருள்பாலிக்க வேண்டும்!’’ என்று மன முருகப் பிரார்த்தித்தான். ஆப்பை லிங்கமாக ஆவாஹனம் செய்து வழிபட்டான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பில் தோன்றி அருள்பாலித்தார்.

மரத்துண்டான ஆப்பில் எழுந்தவர் என்பதால் ‘ஆப்புடையார்’ ஆனார். ஆகவே அந்த இடம் ஆப்பனூர் எனப்பட்டது. பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்ற சிவபக்தன், பல கோடி செல்வத்திற்கு அதிபதியாக வேண்டி, இத்தலத்திற்கு வந்து கடுந்தவம் இருந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார் தம் துணைவி சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி புண்ணியசேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

பெரும் செல்வம் கிடைத்ததால் ஆணவமும் அகங்காரமும் கொண்ட புண்ணியசேனன் சிவபெருமானின் அருகில் இருந்த அம்பிகை குந்தளாம்பிகையின் அழகில் மயங்கினான். இதனால், அவன் இறைவனின் சாபத்துக்கு ஆளானான். தவறை உணர்ந்த அவன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான். அவன் தவறை மன்னித்து ஆப்புடையார். இவனுக்கு ‘குபேரன்’ என்று பெயரிட்டு மறுவாழ்வு தந்தருளினார். அன்று முதல் அவன் குபேரன் என்ற பெயர் கொண்டு பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வந்தான்.

திருவாப்புடையார் கோயில் பல மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே அழகுற அமைந்துள்ளது. நுழை வாயிலின் இரு புறங்களிலும் உள்ள மதிற்சுவர்களின் மீது பல மூர்த்தங்கள் அமர்ந்துள்ளனர். தூண்களுடன் கூடிய முன்பண்டபத்தில் மேல் பகுதியில் தம்பதி சமேதராக சிவபெருமான், பார்வதி, முருகன், விநாயகர், முகப்பில் சிலாவடிவில் காட்சியளிக்கின்றனர் மூலவர் ஆப்புடையார் சுயம்பு மூர்த்தியாக தனிச் சந்நதி கொண்டு கிழக்கு நோக்கியும், அம்மாள் தனிச் சந்நதி கொண்டு கிழக்கு நோக்கியும், அம்மாள் சுகந்த குந்தளாம்பிகை தனிச்சந்நதி கொண்டு தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். ஒருபுறம் மீனாட்சி சமேதராக சொக்கநாதரும், மற்றொருபுறம் வள்ளி தெய்வானை சமேதராக சண்முகரும் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நடராஜர் சந்நதி அழகுற அமைந்துள்ளது. ஆலயத்துள் அனுக்கை விநாயகர், காசி விஸ்வநாதர் மற்றும் நவகிரகங்கள் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.

மூலவர் திருவாப்புடையார் சிறிய லிங்கத்திருமேனியுடையவர் என்றாலும் இவரது பெருமை உயர்ந்தது. இத்திருமேனி எல்லா தெய்வங்களையும் உள்ளடக்கிய லிங்கமாக விளங்குகிறார். மலைகளில் மேரு மலையைப் போலவும், பசுக்களில் காம தேனுவைப் போலவும், விண் மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், பிரகாசமுள்ள பொருள்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், நதிகளில் கங்கையைப் போலவும், புருஷர்களுள் மகாவிஷ்ணுவைப் போலவும் – இம்மாதிரி எதுஎது மகிமைமிக்கதோ, அதே போல் இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களைவிட மகிமைமிக்கவர் எனப் போற்றப்படுகிறார். இவரை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் அர்ச்சித்து வழிபட்ட பலன் கிடைக்கும். என
தலபுராணம் கூறுகிறது.

மதுரையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் இது அப்பு (நீர்) ஸ்தலமாகும். சோழாந்தக மன்னனின் வழி வந்த சுகுண பாண்டியனின் ஆட்சியில் பஞ்சம் நிலவியது. இக்கோயிலின் அர்ச்சகர் நெல்லுக்கு பதிலாக வைகை ஆற்று மணலை சமைத்தார் மணல் அன்னமாக மாறியது. மக்கள் பசி தீர்ந்தது. இதனால் இத்தல இறைவனுக்கு, ‘அன்னவிநோதன்’ என்றும் பெயர் ஏற்பட்டது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள முருகன் சந்நதியில் வந்து பிரார்த்திக்கிறார்கள்.

செல்வவளம் பெருக ஆப்புடையாருக்கு அர்ச்சனை செய்கின்றனர்.செல்லும் வழி: பழமையான இந்தக் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்துக்கு உட்பட்டது. பிரதான பேருந்து தடமான மதுரை மாட்டுத் தாவணி கோரிப்பாளையம் பாதையில் அமைந்துள்ளது.நடைதிறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை. மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

The post அனைத்து தெய்வங்களையும் ஆட்கொண்டருளும் ஆப்புடையார் appeared first on Dinakaran.

Related Stories: