அனைத்து தேர்தல்களிலும் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஆதி அருந்ததியர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

 

ஊட்டி,பிப்.3: தமிழ்நாடு ஆதி அருந்ததியர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு கைகாட்டி சுப்பிரமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் உக்கடம் நாகேந்திரன்,கருப்புசாமி நாகராஜ் என்கிற ரங்கன், முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் அருந்தியர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் அருந்ததியர் இன மக்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். சாதி சான்றிதழ்களில் ஒற்றை வரியில் ஆதிதிராவிடர் என பதிவிடுவதை தவிர்த்து அருந்ததியர் (எஸ்சிஏ.,) என்று சான்று வழங்க வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் மாற்றி பதிவு செய்யாமல் உள்ளபடி அருந்ததியர் என பதிவு செய்ய வேண்டும். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து குந்தாவை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் டாக்டர் அம்பேத்கார் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதி குறைவாக உள்ளது. இம்மாவட்டத்திற்கு ரூ.250 கோடி நிதியை மாவட்ட தொழில் மையத்திற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஆதிஅருந்ததியர் சமுதாய பேரவையின் தலைவராக சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அனைத்து தேர்தல்களிலும் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஆதி அருந்ததியர் சமுதாய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: